சிங்கப்பூரில் மக்கள் தொகையில் பாதி அளவிலான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று பணிக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கூடுதலாக சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் அது கூறியுள்ளது.
இதன் மூலம் மக்கள் ஒன்று கூடுதல் மற்றும் பொருளியல் நடவடிக்கைகளில் அதிகமாக நபர்கள் பங்கேற்கலாம். சமூக ஒன்று கூடல்களில் 8 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிப்பு குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கும் நிலையில் திரையரங்குகள், வழிபாட்டு நிகழ்ச்சிகள், நேரடி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக்கப்படலாம். அதாவது சராசரியாக 500 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்படலாம்.
அதேபோல முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 8 பேர் வரை உணவகங்களில் குழுவாக அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படலாம்.