முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சிங்கப்பூரர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் இனி சிங்கப்பூரின் நிலச் சோதனைச் சாவடிகள் வழியாக நாட்டிற்குள் நுழையும்போது சுகாதார அறிக்கையை (Health Declaration) நிரப்ப வேண்டியதில்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வருகின்ற வெள்ளிக்கிழமை ஏப்ரல் 15ம் தேதி முதல் மேற்குறித்த இந்த தளர்வு அளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்தியா போன்ற பிற நாடுகளில் இருந்து விமானம் அல்லது கடல் வழியாக சிங்கப்பூருக்கு வரும் அனைத்து பயணிகளும் இந்த தளர்வு பொருந்தாது என்றும் SG வருகை அட்டையைத் தொடர்ந்து நிரப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்தின் அளவைக் கணக்கில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று புதன்கிழமை (ஏப்ரல் 13) காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விலக்கு தகுதியான பயணிகளுக்கு, குறிப்பாக வேலை மற்றும் படிப்புக்காக தினசரி எல்லைகளைக் கடப்பவர்களுக்கு அதிக வசதியை வழங்கும் என்று ICA மேலும் கூறியது. மேலும் இந்த விலகிற்கு தகுதிபெற, பயணிகள் கடந்த ஏழு நாட்களில் தடைசெய்யப்பட்ட வகையில் எந்த நாடு அல்லது பிராந்தியத்திற்கும் பயணம் செய்திருக்கக்கூடாது.
தடைசெய்யப்பட்ட பிரிவில் உள்ள நாடுகள் என்பது, பெருந்தொற்று ஆபத்து அதிகம் உள்ள நாடுகள் என்பதாகும். ஆனால் தற்போது அந்த பட்டியலில் எந்த நாடுமே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டவர்கள், அவர்களின் தடுப்பூசி நிலையை Trace Together அல்லது Health Hub செயலியில் Update செய்திருக்கவேண்டும்.
சிங்கப்பூருக்கு வெளியே தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு, அவர்கள் முதலில் நாட்டிற்குள் நுழைந்தவுடன், அவர்களின் தடுப்பூசி பதிவேடு சுகாதார அமைச்சகத்தின் பதிவேட்டில் Update செய்யப்பட வேண்டும். சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் ICAன் தடுப்பூசி சோதனை போர்டல் மூலம் அவர்களின் டிஜிட்டல் வெளிநாட்டு தடுப்பூசிச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் இதை அவர்கள் செய்யமுடியும்.
நிலச் சோதனைச் சாவடிகள் வழியாக வரும் மற்ற அனைத்துப் பயணிகளும் சிங்கப்பூருக்கு வந்த மூன்று நாட்களுக்குள் SG வருகை அட்டை இ-சேவை மூலம் தங்கள் சுகாதார நிலைப்பாட்டை சமர்ப்பிக்க வேண்டும்.