சிங்கப்பூரில் தற்போது உணவு மற்றும் குளிர்பான விற்பனை நடவடிக்கைகளுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள நைட் லைஃப் நிறுவனங்கள் தங்கள் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு முன், சில சோதனைகளை கடந்து வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் (MTI) நிபந்தனை அனுமதி பெற வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனங்களின் ஆபரேட்டர்கள் F&B துறைக்கான கூடுதல் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், உள்துறை அமைச்சகம் (MHA) மற்றும் MTI ஆகியவை இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தன.
சில வாரங்களுக்கு முன்பு கே-டிவி ஓய்வறைகள் மற்றும் இரவு விடுதிகள் மூலம் தொற்று சம்பவங்கள் பரவத்தொடங்கியதால் அனைத்து இரவு வாழ்க்கை நிறுவனங்களும் ஜூலை 16 முதல் இரண்டு வாரங்களுக்கு தங்களுடைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுன் என்று அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று ஜூலை 31ம் தேதியுடன் அந்த தடை நிறைவுபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அக்டோபர் 2020 முதல் சுமார் 50 முக்கிய இரவு நேர நிறுவனங்கள் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கை மீறல்களைச் செய்துள்ளன, அவை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என்று அமைச்சகங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.