வருகின்ற 21ம் தேதி முதல் சிங்கப்பூரில் உணவு பானக்கடைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் சில கட்டுப்பாடுடன் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.
உணவு பானக்கடைகளில் இருவர் மட்டும் குழுவாக அமர்ந்து உண்பதற்கு அனுமதி. அப்படி அமர்ந்து உண்ணுபவர்கள் மற்ற மேசைகளில் உள்ளவர்களோடு எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது. மேலும் 1 மீட்டர் தனிநபர் இடைவெளி பின்பற்றியே மேசைகளில் அமர வேண்டும். சாப்பிடும் நேரத்தை தவிற மற்ற நேரங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.
கடைகளில் அதிக சத்தத்துடன் பேசவோ அல்லது பாடல்கள் ஒலிபரப்பவோ அனுமதியில்லை. ஏற்கனவே காணொளிகள் ஒளிபரப்புதல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு தடை உள்ளது.
இதே போல் உடற்பயிற்சி கூடங்களில் முகக்கவசம் அணியாமல் இருவர் இருவராக குழு அமைத்து உள்ளே உடற்பயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் உட்பட அதிகபட்சம் 30 பேர் மட்டுமே உள்புறம் ஒரு நேரத்தில் பயிற்சி செய்ய அனுமதி.
ஒவ்வொரு இருநபர் குழுவும் குறைந்தது 3 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்கவும் குழுவில் உள்ள இருவருக்கும் இடையே 2 மீட்டர் இடைவெளியும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோய்ப்பரவலை தடுக்க இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சுகளுக்கு இடையேயான பணிக்குழுவானது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.