TamilSaaga

NDP 2025 தேசிய கல்வி நிகழ்ச்சிகள்: ஜூலை போக்குவரத்துத் தடைகள் பற்றிய முக்கிய தகவல்கள்!

சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்பு (National Day Parade – NDP) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9ஆம் தேதி நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடும் மிக முக்கியமான நிகழ்வாகும். இந்த ஆண்டு, 2025ஆம் ஆண்டு தேசிய தின அணிவகுப்பிற்காக, பதாங் (Padang) பகுதியில் நடைபெறவுள்ள தேசிய கல்வி நிகழ்ச்சிகள் (National Education Shows – NE Shows) ஜூலை 5, 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளால், சிங்கப்பூரின் மையப் பகுதிகளில் பயணத் தடைகள், பேருந்து வழித்தட மாற்றங்கள் மற்றும் பிற போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பட உள்ளன.

தேசிய தின அணிவகுப்பு சிங்கப்பூரின் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் நாட்டுப் பற்றைக் காட்டும் ஒரு பெரிய நிகழ்ச்சி. இந்த வருடம், ஆகஸ்ட் 9ஆம் தேதி பதாங் மற்றும் மெரினா விரிகுடா பகுதிகளில் நடக்கும் இந்த அணிவகுப்பு, சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து 60 வருடங்கள் ஆனதைக் கொண்டாடுகிறது.

இதற்கு முன்னதாக, பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தேசப் பற்றை வளர்க்கும் வகையில் தேசிய கல்வி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு சிங்கப்பூரின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் வளர்ச்சியைப் பற்றி சொல்லிக் கொடுக்கும்.

இந்த தேசிய கல்வி நிகழ்ச்சிகள் ஜூலை 5, 12 மற்றும் 19 ஆகிய சனிக்கிழமைகளில் பதாங் பகுதியில் நடக்கும். அதனால், இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடைபடும். சிங்கப்பூர் காவல்துறை அறிவித்துள்ளபடி, இந்த நாட்களில் மக்கள் வேறு வழிகளில் செல்லவும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து தடைகள் மற்றும் பாதிக்கப்படும் பகுதிகள்:

தேசிய கல்வி நிகழ்ச்சிகளுக்காக, பதாங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லும் முக்கிய பாதைகள் மூடப்பட உள்ளன. பீச் ரோடு, பிராஸ் பாசா ரோடு, கோலியர் குவே, கில்லேமர்டு ரோடு, ஹில் ஸ்ட்ரீட், மவுண்ட்பேட்டன் ரோடு, நார்த் பிரிட்ஜ் ரோடு, ராஃபிள்ஸ் அவென்யூ, ராஃபிள்ஸ் பவுல்வார்டு, ரிபப்ளிக் பவுல்வார்டு, தெமாசெக் அவென்யூ, தெமாசெக் பவுல்வார்டு மற்றும் விக்டோரியா ஸ்ட்ரீட் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து தாமதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

வாகன ஓட்டிகள், குறிப்பாக சன்டெக் சிட்டி மற்றும் மெரினா ஸ்கொயர் போன்ற இடங்களுக்குப் போறவங்க, பேஃப்ரண்ட் அவென்யூ அல்லது ரோச்சோர் ரோடு வழியா தெமாசெக் பவுல்வார்டுக்கு போறதுக்கு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தலாம்.

மேலும், இந்தக் குறிப்பிட்ட சாலைகளில் வண்டிகளை நிறுத்த கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் அப்புறப்படுத்தப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

பேருந்து வழித்தட மாற்றங்கள்:

பதாங் பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளால், நிறைய பேருந்து சேவைகள் பாதிக்கப்படும்.

SBS ட்ரான்ஸிட் நிறுவனத்தின் 25 பேருந்து சேவைகள் (அவை: 10, 14, 16/16M, 32, 51, 56, 57, 63, 70/70M, 80, 100, 107/107M, 111, 124, 130, 131, 133, 145, 166, 174, 195, 196, 197, 851, 851e) மற்றும் SMRT நிறுவனத்தின் சேவைகளான 61, 960, 960e, 961 ஆகியவை மாற்றுப் பாதைகளில் செல்லும்.

கோ-அஹெட் சிங்கப்பூர் நிறுவனத்தின் 36 மற்றும் 518 ஆகிய பேருந்து சேவைகளும் பேஃப்ரண்ட் அவென்யூ, ராஃபிள்ஸ் அவென்யூ, தெமாசெக் அவென்யூ, தெமாசெக் பவுல்வார்டு ஆகிய பகுதிகளில் உள்ள சில நிறுத்தங்களைத் தவிர்த்துச் செல்லும்.

திருப்பத்தூரில் அதிரவைத்த கொலை: சிங்கப்பூர் காதலனின் தூண்டுதலில் கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி!

குறிப்பாக, 961 சேவை பேருந்து, பீச் ரோடு, நார்த் பிரிட்ஜ் ரோடு, பார்லிமென்ட் பிளேஸ் ஆகிய பகுதிகளில் முதல் பேருந்து முதல் கடைசி பேருந்து வரை நிறுத்தங்களில் நிற்காது.

61 சேவை பேருந்து, நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள தி ட்ரெஷரி (The Treasury) அருகே பகல் 1 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6:30 மணி முதல் 8 மணி வரையும் பாதிக்கப்படும்.

இந்த மாற்றங்களால், மக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது அவசியம்.

பொதுமக்களுக்கு அறிவுரைகள் மற்றும் மாற்று ஏற்பாடுகள்:

சிங்கப்பூர் காவல்துறையும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், மக்கள் முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். பதாங் மற்றும் மெரினா விரிகுடா பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள், சிட்டி ஹால், ராஃபிள்ஸ் பிளேஸ் அல்லது மெரினா பே போன்ற மற்ற MRT நிலையங்களைப் பயன்படுத்தலாம். ஏனென்றால், எஸ்பிளனேட், ப்ரோமனேடு, பேஃப்ரண்ட் MRT நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

நிகழ்ச்சி நடக்கும் நாட்களில், காவல்துறை, சிங்கப்பூர் ஆயுதப் படைகள், துணைக் காவலர்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள், போக்குவரத்து பாதிக்கப்படும் இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு உதவ பணியில் இருப்பார்கள். மக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் தாமதங்களைத் தவிர்க்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு, NDP ஏற்பாட்டாளர்களை 1800-637-2025 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.smrt.com.sg என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts