சிங்கப்பூரின் மிகப்பெரிய கொரோனா தொற்று குழுமமாக மாறிய ஜூரோங் மீன்வள துறைமுகம் கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் கடந்த திங்கள் கிழமை (ஆகஸ்ட்.02) அன்று துறைமுகம் திறக்கப்பட்டுள்ளது.
ஜூரோங் மீன்வள துறைமுகத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் ஆகியோரில் சுமார் 80% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக என நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.
மேலும் ஜூரோங் துறைமுகம் சார்ந்த பணியாளர்களில் சுமார் 88 சதவீதம் பேர் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். இதன்மூலம் துறைமுகத்தின் தொழிலாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் இடையே தடுப்பூசி விகிதம் உயர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 02 வரை சுமார் 1072 கொரோனா தொற்று எண்ணிக்கை இந்த துறைமுகம் மற்றும் அதனை சார்ந்த ஹாங் லிங் மார்கெட் மற்றும் உணவு மையத்தில் பதிவு செய்யப்பட்டது. நேற்று (ஆகஸ்ட்.3) காலை துறைமுகத்தை அமைச்சர் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தனது ஒரு முகநூல் பதிவில் ஜூரோங் மீன்வள துறைமுகத்தின் பரபரப்பான வர்த்தகம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், இனி சந்தைகளில் அதிக அளவில் கடல் உணவு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.