சிங்கப்பூரில் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கும் முன் MRT ரயிலை Buona Vista நிலையத்தில் நிறுத்துவதற்காக அவசரகால நிறுத்தும் கருவியை அழுத்திய நபருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 9) 5,600 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிளமென்ட் ஜோசுவா டான் டெக் கிம்மின் செயல்களால், ரயில் சேவை சுமார் இரண்டு நிமிடங்கள் நிறுத்தப்பட்டதால், பயணிகளுக்கு தாமதம் ஏற்பட்டது. தற்போது 49 வயதாகும் அந்த சிங்கப்பூரர், பொதுத் தொல்லை மற்றும் மற்றொரு நபர் மீது தாக்குதல் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி காலை 11 மணியளவில் புனா விஸ்டா MRT நிலையத்தில் ரயிலில் ஏறும் போது டான் தனது மொபைல் போனை தண்டவாளத்தில் தவறவிட்டார். இதனையடுத்து அவர் உதவியை நாடியபோது, ஒரு SMRT நிலைய மேலாளர், ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், அடுத்த நாள் தான் தொலைபேசியை மீட்டெடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
ஆனால் ரயில் சேவைகளை நிறுத்துமாறு டான் வலியுறுத்தினார் இதனையடுத்து நிலைய மேலாளர் காவல்துறையை அணுகினர். காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்ததும் டான் ஸ்டேஷனை விட்டு வெளியேறினார், மீண்டும் அன்று மாலை சுமார் 3.50 மணிக்கு அவர் மீண்டும் MRT நிலையத்திற்கு திரும்பினார். அவர் SMRT ஊழியர்களிடம் தனது குழந்தைக்கு காய்ச்சல் இருப்பதால் அவருக்கு அவசரமாக தொலைபேசி தேவை என்றும், இந்த விஷயத்தைப் பற்றி தனது காதலியிடம் பேச வேண்டும் என்றும் கூறினார்.
மீண்டும் அதிகாரிகள் அவரிடம் ரயில் சேவைகளை சீர்குலைக்க முடியாது என்றும் அவரது நிலைமை மிகுந்த அவசரமுள்ள நிலை இல்லை என்றும் பதிலளித்தனர். இருந்த போதிலும், டான் ரயிலை நிறுத்தும் கருவியை நோக்கி சென்றபோது அவரைத் தடுக்க முயன்ற 56 வயதான SMRT உதவி மேலாளரைத் அவரை தள்ளிவிட்டார். உடனே டான் அந்த கருவியை அழுத்தியதால், பிளாட்பாரத்தை நெருங்கிக்கொண்டிருந்த ரயில் நிறுத்தப்பட்டது.
இந்த குளறுபடுகளை கண்ட பாதுகாப்பு அதிகாரி அவரது சட்டையைப் பிடித்துத் தடுக்க முயன்றார். உடனடியாக டான் அந்த நபரின் முகத்தில் குத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார். அதன் பிறகு புகார் அளிக்கப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.