சிங்கப்பூரின் புங்கோல் பகுதியில் உள்ள ஒரு சாலையில் பயணித்த வாகன ஓட்டுநர், அந்த பகுதியில் துணை இன்றி சாலையின் நடுவே நின்ற ஒரு குழந்தையை கண்டார் சாலை நடுவில் நின்ற அந்த குழந்தையை பார்த்து மிக சரியான நேரத்தில் அவர் பிரேக் போட்டுள்ளார். நேற்று பிப்ரவரி 15 அன்று எட்ஜெடேல் ப்லைன்ஸ் பகுதியில் மாலை 6:15 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ எதிரே வரும் வாகனத்தின் டேஷ்கேமில் பதிவாகியுள்ளது.
வைரலான அந்த காணொளியில் ஆரஞ்சு நிற மேல் ஆடை அணிந்த ஒரு சிறு குழந்தை, சாலைக்கு நடுவில் உள்ள பாதசாரிகள் கடக்கும் இடத்தில் கவனிக்கப்படாமல் காணப்பட்டது. சரியான பாதையில் அந்த கார் வந்துகொண்டிருந்தபோதும் இடையில் அந்த குழந்தையை கண்டதும் ஓட்டுநர் சட்டென்று சரியான நேரத்தில் பிரேக் போட்டுள்ளார். உடனே வாகனம் நின்றதைக் கண்டு, நடுரோட்டில் நின்றிருந்த அந்த சிறுவன், எதிர் திசையை நோக்கி ஓட, அவன் அருகில் சாலையோரமாக நின்ற மற்றொரு சிறுமி செய்வதறியாது நின்றாள். இறுதியில் அந்த சிறுவன் சாலையை கடந்ததும் ஒரு பெண்மணி அந்த குழந்தையை நோக்கி ஓடுகிறார்.
இணையத்தில் வைரலான இந்த காணொளியை கண்ட பலரும் அந்த பெண்மணியை கடுமையாக சாடியுள்ளார். சிறுவர்களை சாலைக்கு அழைத்துவந்த பிறகு எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கின்றனர் என்று பலரும் கூறுகின்றனர். அதே போல ஒரு குழந்தையை பிடிக்க சென்ற அவர் தனக்கு பின்னால் இன்னொரு குழந்தையை தனியே விட்டு சென்றதையும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.