சிங்கப்பூரில் இரவு நேர பணியின்போது, தனது சக ஊழியர் ஒருவரை பல தருணங்களில் பாலியல் வன்கொடுமை செய்த 42 வயது நபருக்கு இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) 26 மாத சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல் வன்கொடுமைக்கு பிறகு இப்பொது மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்க, S$766.56 (US$596) செலுத்தவும் அந்த நபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் மீது சுமத்தப்பட்ட மூன்று பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார், மேலும் அதே மூன்று குற்றச்சாட்டுகள் அவரது தண்டனையில் பரிசீலிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் அடையாளத்திற்கு வழிவகுக்கும் என்பதால் தண்டனை பெரும் அந்த நபரின் பெயரைக் குறிப்பிட முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால் இப்பொது அந்த நபர் தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். அபோட்ஸ் சேம்பர்ஸ் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த திரு. ஜினோ ஹர்தியால் சிங் மற்றும் திரு. அரிஃபின் ஷா ஆகியோர் அவருக்கு ஆதரவாக வாதிட்டு வருகின்றனர். கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி அன்று இரவுப் பணியில் ஒன்றாக இருந்தபோது, குற்றவாளி முதலில் அந்த பெண்ணை அவரது அனுமதியின்றி பின்னால் இருந்து கட்டிப்பிடித்துள்ளார்.
மேலும் 2024ம் ஆண்டில் பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 9 வரை இரவுப் பணியில் அந்த பெண் இருந்தபோது, அதிகாலை 1.30 மணியளவில், அந்த நபர் அந்தப் பெண்ணைத் தனது மடியில் உட்கார வைத்து, பின்னால் இருந்து கட்டியணைத்துள்ளார். மேலும் அவருடைய இந்த செயலுக்கு அந்த பெண் பலமுறை மருத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. பலமுறை அந்த நபரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளான அந்த பெண் ஒரு நாள் காலை, தனது ரிப்போர்டிங் அதிகாரிக்கு, இனி இந்த குழுவில் பணிபுரிய தனக்கு விருப்பம் இல்லை என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.
பிப்ரவரி 13, 2024 அன்று பிற்பகல் அந்த பெண் போலீசில் புகார் செய்த நிலையில் அந்த குற்றவாளி மறுநாள் கைது செய்யப்பட்டுள்ளார்.