TamilSaaga

“இந்த Wheel Chair என் வாழ்க்கையல்ல” : இந்தியாவில் ஏற்பட்ட விபத்து – செயலிழந்த உடல் – தடை தாண்டி சாதிக்கும் சிங்கப்பூர் மாடல்

பேஷன் உலகில் தினமும் புதுப்புது ட்ரெண்ட் வருவதும் அதனை கடந்து செல்வதும் நம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது. பலரது பெரும் கனவாகவே இருக்கும் மாடலிங் துறையில் சாதித்திருக்கிறார் மாற்றுத் திறனாளி பெண் பாத்திமா ஜோஹ்ரா.

மாடலிங் துறையில் பல விசித்திரங்களை பார்த்திருப்போம். மாற்றங்களை விரும்பி வரவேற்கும் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில், 25 வயது நிரம்பிய நமது சிங்கப்பூர் மாடல் பாத்திமா மற்றவர்களின் புருவங்களை ஆச்சரியத்தில் உயர வைத்திருக்கிறார். பிரபல மாடலாக வலம் வந்தாலும், வாழ்க்கையை புரட்டிப் போட்ட விபத்தில் இருந்து மீண்டு(ம்) வந்திருக்கிறார்.

Exclusive : சிங்கப்பூரில் அண்ணன் வாங்கிய லாரிக்கு கடன் கையெழுத்து போட்ட தம்பி.. 3 வருட வாழ்க்கையை தொலைத்த கொடுமை – எச்சரிக்கும் உண்மை சம்பவம்

ஒரு சின்ன பிளாஷ் பேக். 2017ல் நடந்த கார் விபத்தில் பாத்திமா ஜோஹ்ராவின் வாழ்க்கையே மாறி போனது. இந்தியாவில் தனது நண்பர்களுடன் பாத்திமா சுற்றுலா சென்றிருந்த போது, அவர்களின் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் ஒரு மாதம் கோமா நிலைக்கு சென்றார், பாத்திமா. ஜோஹ்ரா கண்விழித்ததும், மருத்துவமனை படுக்கையில் தன் கைகள் கட்டப்பட்டிருந்ததையும், கழுத்தில் குழாய்கள் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சியில் மூழ்கினார். முதுகுத்தண்டில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, கழுத்துக்குக் கீழே உள்ள அனைத்து தசைகளும் சேதமடைந்தன.

முதுகுத்தண்டில் ஏற்பட்ட பாதிப்பால், தசை பிடிப்பு, கால்களில் நாள்பட்ட வலி, சுவாசப் பிரச்சனைகள் மற்றும் ஏற்ற இறக்கமான இரத்த அழுத்தம் என கண் இமைக்கும் நேரத்தில் வாழ்க்கையே சின்னாபின்னமாகி இருப்பதை உணர்ந்த பாத்திமா, தன்னுடைய தேவையை கூட மற்றவர்கள் உதவியுடன் செய்ய வேண்டுமா என மனம் நொந்து போனார்.

இதைவிட, மருத்துவமனை குறித்த ஒரு விதமான பயம் தனக்கு ஏற்பட ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார், பாத்திமா. அதற்கு காரணம் தனக்கு ஏற்பட்ட காயத்தை விட மருத்துவமனையில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் தான் தன்னை முற்றிலும் அழித்ததாக வருந்துகிறார்.

“மருத்துவமனை நெடி என்னை கொன்றதை விட, அசைய முடியாத என்னுடைய நிலைக்கு கண்டு மற்றவர்கள் பேசியதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்னால் எதையுமே உணர முடியவில்லை என எல்லோரும் நினைத்தார்கள். காய்கறிகளை போல தான் அங்கு என்னை பார்த்தார்கள். மருத்துவமனையில் என்னை உயிரற்ற பொருளை போல தான் நினைத்தார்கள். அது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.யாரோ என்னை தூக்கிக்கொண்டு போய் விடுவார்களோ என்ற பயத்தில் தூக்கமில்லாத இரவுகளை கழித்தேன். இது வாழத் தகுதியான வாழ்க்கை இல்லை” என உயிரோடு கொன்ற நாட்களை விவரிக்கிறார், பாத்திமா.

இருளில் இருந்து வெளிவருவதற்கான ஒளிவட்டம் பாத்திமாவுக்கு தெரிய ஆரம்பித்தது. சிங்கப்பூரில் உடல் ஊனமுற்றோருக்கான சமூகம் (SPD) என்ற தொண்டு நிறுவனம் அவருக்கான பிசியோதெரபி சிகிச்சைகளை அளித்தது. இந்த சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளும் வரை பாத்திமா தன்னால் எழுந்து நடக்க முடியும் என்பதை நினைத்து கூட பார்க்கவில்லை.

வாரங்கள் செல்ல செல்ல, மெல்ல மெல்ல உடலில் சிறிய மாற்றங்களைக் காண ஆரம்பித்தார், பாத்திமா. தன்னால் நன்றாக சுவாசிக்கவும், அதிக நேரம் உட்காரவும் பிறகு நிற்கவும் முடிந்ததை உணர்ந்தார்.

மாற்றங்கள் மெதுமாக ஏற்பட்டாலும், பாத்திமாவுக்கு பெரிய நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது. “தன்னால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது” என்ற உறுதியுடன் அவருடைய எண்ணங்களை வெளிப்படுத்தினார். அதன் மூலம் வெளிப்பட்ட, புதிய எனர்ஜியுடன் மறுவாழ்வு அமர்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

ஜோஹ்ராவைப் பொறுத்தவரை, குணமடைவது என்பது நடக்கக்கூடிய திறனை மீட்டெடுப்பது மட்டுமல்ல. இது அவரது சுதந்திரத்தையும், அடையாளத்தையும் மீட்டெடுப்பதுமாகும். அதனால், படுக்கையில் இருந்து எப்படி எழுவது, எப்படி மேக்கப் செய்வது, எப்படி மெசேஜ் அனுப்புவது என்று கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். வாரத்திற்கு மூன்று முறை ஜிம் பயிற்சிகளில் பங்கேற்றார்.

கைபேசியில் அழைப்பை ஏற்பதற்காக தன் கைபேசியின் பின்புறம் உள்ள மோதிரப் பிடியில் தன் ஆள்காட்டி விரலைச் செருகினார். பின்னர் பாத்திமா தன் கைபேசியை புரட்டி, அதை தன் உள்ளங்கையில் சாய்த்து, செய்தியைப் படிக்கவும், இடது கையால் மெதுவாகப் பதிலை எழுதவும் தொடங்கினார்.

மற்றவர்களின் எதிர்மறை விமர்சனங்கள் தான் இவரை இன்னும் அதிகம் முன்னே செல்ல வைக்கிறது. ஆடை அணிந்து, மேக்கப் போட்டு, நண்பர்களுடன் வெளியே செல்லவும், கடற்கரைக்குச் செல்லவும் பாத்திமாவால் முடிகிறது. பாத்திமா குணமடைவது, தனது உடற்பயிற்சிகள் மற்றும் மனநல ஆலோசனை குறித்த வீடியோக்களை Zoe Zora என்ற சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிக் டாக்கில் இவரது வீடியோ ஒன்று 26 பார்வைகளை பெற்றுள்ளது.

சிங்கப்பூர்.. ரத்தான பயணம் : “என் குழந்தை தரையில் தூங்கினான்” – Scoot மற்றும் SIAவை கடுமையாக சாடிய வெளிநாட்டு பெண்

தன்னுடைய சோதனையை சாதனையாக மாற்றி, மாடலிங் துறையில் கலக்கும் பாத்திமா, மாற்றுத்திறனாளிகளுக்கான வழக்கறிஞர், சமூக நிறுவனத்தின் மேலாளா் என பன்முறை திறமைகளுக்கு சொந்தக்காரர். ஆனால் இவர் வெளியே செல்லும் போது, மக்கள் பார்ப்பது அவரது சக்கர நாற்காலியை தான்.

“மக்களின் கண்களுக்கு என்னை தெரியவில்லை. குறிப்பாக என் சக்கர நாற்காலியைத் தவிர வேறெதையும் பார்க்க அவர்கள் தயாராக இல்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை இன்னும் நான் இங்கேயே தான் இருக்கிறேன். என்ன நடந்தது, ஏன் நான் சக்கர நாற்காலியில் இருக்கிறேன் என்று கேட்கும் நபர்களை நான் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறேன். மாற்றுத்திறனாளிகளை நோயுற்றவர்களாக அல்லது பரிதாபமாக இருப்பதாக  பலர் நினைக்கின்றனர். அத்துடன், அணியும் ஆடைகளை கண்டு, தரக்குறைவாக பேசுபவர்கள் பலரும் இருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்”, பாத்திமா.

இந்தியா – சிங்கப்பூர்: VTL பயணத்திற்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும்? – அவை இல்லாமல் பயணிக்க முடியுமா?

“என் வாழ்க்கை வித்தியாசமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் நான் இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன் என்பதை உணர்கிறேன். ஏனென்றால், இந்த வாழ்க்கையை மாற்றும் அனுபவம் இல்லையென்றால், நான் மற்றவர்களின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்க மாட்டேன்”, என நெகிழ்ந்துள்ளார்.  

மாற்றுத்திறனாளிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சக்கர நாற்காலிக்கு அப்பால் உள்ள மனிதநேயத்தையும் பார்க்க வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், தன்னம்பிக்கை மனுஷி பாத்திமா.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts