TamilSaaga

‘இந்திய ஊழியர்கள் சிங்கப்பூர் வர விரைவில் அனுமதிக்கப்படலாம்’ – சிங்கப்பூர் தொழிற்சங்கங்கள் முடிவு

சிங்கப்பூரில் கட்டுமானம், கடல் துறை மற்றும் செய்முறை தொழில்துறை உள்ளிட்ட மூன்று துறைகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இம்மாதத்தில் இருந்து இந்திய ஊழியர்கள் சிறிய அளவில் சிங்கப்பூர் வர விரைவில் அனுமதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த முயற்சி வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் பாதுகாப்பாகவும், சீரான அளவிலும் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வருவதற்கு அந்த முறை பயன்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் ஒப்பந்தக்காரர்கள் சங்கம், சிங்கப்பூர் கடல் துறை நிறுவனங்கள் சங்கம் மற்றும் செய்முறை தொழிற்சங்கம் ஆகியவை நேற்று கூட்டறிக்கை மூலமாக தெரிவித்துள்ளன.

இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ் அண்டை நாடான மலேசியாவிலிருந்து வந்த சில ஊழியர்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள் சிங்கப்பூர் வந்தடைந்ததும் வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

மேலும் நடப்பிலுள்ள சுகாதார நடவடிக்கைகளுக்கு அவர்கள் உட்பட வேண்டும். கொரோனா பரவல் காரணமாக சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் வரத்து குறைந்தது. இதனையடுத்து இந்த மூன்று துறைகளும் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு அண்மையில் சென்றவர்கள் சிங்கப்பூரில் நுழைய இப்போதைக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா பரவல் தொடங்கியதை அடுத்து நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் கடுமையான நெருக்கடிகளை தணிக்கும் விதமாக அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் இல்ல பணிப்பெண்கள் சிங்கப்பூர் வர விரைவில் அனுமதிக்கப்படுவர் என்று வர்த்தக தொழில் அமைச்சர் காம் கிம் யோங் சென்ற மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts