சிங்கப்பூரில் கிருமித் தொற்றுக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவரும் முன்னரே தனிமைப்படுத்துதலுக்கான விதியை மீறிய வெளிநாட்டவருக்கு 9 மாத சிறை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பாலச்சந்திரன் பார்த்திபன் எனும் அந்த 26 வயது வெளிநாட்டு ஊழியர் விடுதியில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 23ஆம் தேதி உடல் நலம் குன்றிய அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது. அதேசமயம் அந்த விடுதியில் இருந்து வேறு சிலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து அந்த ஆடவர் பரிசோதனைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவரது கிருமித்தொற்று பரிசோதனை முடிவு கிடைக்கும் வரை அங்கேயே காத்திருக்க அறிவுறுத்தப்பட்டார்.
ஆனால் அந்த ஆடவர் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு இந்தியாவுக்கு செல்ல விமான சீட்டு வாங்க விமான நிலையத்திற்கு சென்றார். அவருக்கு அங்கு விமான டிக்கெட் கிடைக்காததால் விமான நிலையத்தில் அவர் நான்கு மணி நேரம் சுற்றித்திரிந்து உள்ளார்.
இதனையடுத்து காவல்துறை அவரை தேடி கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஜூன் 8ம் தேதி மருத்துவமனையில் இருந்து மீண்டும் தங்கும் விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டார் அந்த ஆண்டவர். மேலும் 14 நாட்கள் வெளியே செல்லக்கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் அந்த ஆடவர் ஜூன் 16ம் தேதி மீண்டும் இந்தியாவுக்கு செல்ல பயணச்சீட்டு வாங்க விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு பயணச்சீட்டு கிடைக்காததால் தமது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சட்டத்தை மீறிய அந்த ஆடவருக்கு 10,000 வெள்ளி அபராதம் அல்லது 6 மாத சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த ஆடவருக்கு கொரோனாவும் உறுதியாகியுள்ளது.