TamilSaaga
Trichy airport

“2022 புத்தாண்டு பரிசு” – திருச்சி விமான நிலையத்துக்கு காத்திருக்கும் “சர்பிரைஸ்” அறிவிப்பு

வழக்கமாக திருச்சிராப்பள்ளியும் கேரள விமான நிலையங்களும் பிற இந்திய விமான நிலையங்களை ஒப்பிடுகையில் மிகவும் வித்தியாசமானது.

ஏனெனில் இங்கு வெளிநாட்டு விமான சேவைகளுக்கே தேவை அதிகம். அதற்கேற்ப வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் கடுமையாக உழைக்கும். கால் நூற்றாண்டிற்கு முன்னர் துபயின் ஈமான் (IMAN – Indian Muslim Association) அமைப்பு தலைமையில் “திருச்சிராப்பள்ளி – ஷார்ஜா” விமானசேவைக்கு உழைத்த வரலாற்றை நாம் அறிவோம். அதேபோல் சமீபத்தில், தனது 14 வருட கடுமையான முயற்சியால் “குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் – K-TIC, “திருச்சிராப்பள்ளி – குவைத்” நேரடி விமானசேவையை சாத்தியப் படுத்தியதையும் நாம் அறிவோம்.

வெளிநாட்டு விமானசேவையைப் பொறுத்து இன்னும் மிகக்கடுமையான உழைப்புகள் நடந்து வருகின்றன. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் வெளிநாடுவாழ் மக்கள் பிரிவான காயிதே மில்லத் பேரவையானது சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமனில் உழைத்து வருகின்றது. வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் அற்புதமான உழைப்பை வழங்கி வருகின்றன.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் பணிபுரியும் மாப்பிள்ளை.. ஆஸ்திரேலிய மருமகள்.. தமிழ் இளைஞரின் நாடு விட்டு நாடு கல்யாணமும், ஒரு கிராமமும்!

ஆனால், உள்நாட்டு விமானசேவையைப் பொறுத்து, திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையமானது இரண்டாம் தாரத்தால் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட முதல் தாரத்து பிள்ளையே. தற்போதைய சூழலில் வெளிநாட்டு அளவில் 10 விமான நிலையங்களுடன் நேரடி விமானசேவை இருந்தாலும் உள்நாட்டில் மும்பைக்கோ டெல்லிக்கோ விமான சேவை இல்லை. இதுகுறித்து கும்பகோணம் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளை சார்ந்த டிராவல் ஏஜெண்டுகளும் பொதுமக்களும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். இதன் பலனாக, மக்களவை உறுப்பினர்கள்,
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த,

 1. இராமலிங்கம் – மயிலாடுதுறை,
 2. பழனி மாணிக்கம் – தஞ்சாவூர்,
  இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த,
 3. நவாஸ்கனி – இராமநாதபுரம்,
  இ.கம்யூனிஸ்டைச் சேர்ந்த,
 4. செல்வராஜ் – நாகப்பட்டினம்,
  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்,
 5. திருமாவளவன் – சிதம்பரம்,
 6. ரவிக்குமார் – விழுப்புரம்,
  காங்கிரஸைச் சேர்ந்த,
 7. திருநாவுக்கரசர் – திருச்சிராப்பள்ளி,
 8. ஜோதிமணி – கரூர்,
 9. கார்த்தி சிதம்பரம் – சிவகங்கை மற்றும்
  மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினர்களான,
 10. திருச்சி சிவா,
 11. சண்முகம்
 12. முகம்மது அப்துல்லா
 13. ராஜேஷ் குமார்
 14. அந்தியூர் செல்வராஜ்
  ஆகியோரிடம் கையெழுத்து பெற்று, மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிடம், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் மற்றும் நாகப்பட்டிணம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜுடன் நேரில் சென்று சமர்பித்தார். இதன் தொடர்ச்சியாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திருச்சிராப்பள்ளியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமானசேவை வேண்டும் என்று நேரமில்லா நேரத்தில் (Zero Hour) கோரிக்கை வைத்தார். மனுவை பெற்றுக் கொண்ட மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் படிக்க – துபாயில் நல்ல சம்பளத்தில் வேலை.. இண்டெர்வியூ தேதி அறிவிப்பு – முழு விவரம்

இதைத் தொடர்ந்து விரைவில் இண்டிகோ விமான நிறுவனம் “திருச்சிராப்பள்ளி – டெல்லி” நேரடி விமான சேவைக்கு உறுதியளித்துள்ளது. அநேகமாக 2022 புத்தாண்டு பரிசாக, அதாவது மார்ச் 2022 கடைசி வாரத்தில் தொடங்க திட்டமிட்டிருந்த நேரடி “திருச்சிராப்பள்ளி – டெல்லி” விமானசேவையை ஜனவரி முதல் வாரத்திலேயே தொடங்க திட்டமிட்டுள்ளது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

வெளிநாட்டு சேவைகளில் இந்தியா, கிழக்காசியா, வளைகுடா நாடுகளைப் பொறுத்து திருச்சிராப்பள்ளியானது தவிர்க்க இயலாத விமானநிலையமாக இருந்தாலும், உள்நாட்டு அளவில் தனது வளத்தை (Potential) நிரூபிக்க திருச்சிராப்பள்ளிக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்தது. தற்போது அது கைக்கூடும் காலம் கனிந்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts