TamilSaaga

திடீரென கடிகார திசையில் திரும்பிய கிரேன்.. சிங்கப்பூரில் இளம் இந்திய ஊழியர் உடல் நசுங்கி பலி – வெறும் 32 வயதில் வாழ்க்கையை இழந்த பரிதாபம்!

சிங்கப்பூரில் பணியிடத்தில் மொபைல் கிரேனில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் இந்த ஆண்டு பணியிடத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கூட்டுப் பயிற்சி பெறும் Home Team Tactical Centre அமைந்துள்ள 1 Mandai Quarry சாலையில், நேற்று காலை 10.15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள மனிதவளத்துறை அமைச்சகம் (MOM), இந்தியாவைச் சேர்ந்த 32 வயதான அந்த ஊழியர், கிரேனின் சேஸின் அடியில் அமைந்துள்ள கருவிப்பெட்டியில் இருந்து சில பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தபோது, கிரேன் கடிகார திசையில் திரும்பி அவரை நசுக்கியதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் ‘அடிமைகள்’… சக Dormitory ஊழியர்களை தூண்டிவிட்ட தொழிலாளி – ‘Work permit’-க்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு!

இந்த விபத்து குறித்து காலை 10.20 மணிக்கு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, ஹ்வா யாங் இன்ஜினியரிங் (Hwa Yang Engineering) நிறுவனத்தில் பணிபுரிந்த அந்த இந்திய தொழிலாளி, விபத்துக்கு பிறகு Khoo Teck Puat மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவின்றி இருந்தார். பிறகு, மருத்துவமனையிலேயே அவர் இறந்துள்ளார். எனினும், அந்த ஊழியர் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், என்ன பெயர் போன்ற விவரங்களை MOM வெளியிடவில்லை.

இந்நிலையில், விபத்து குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன. மேலும் அந்த இடத்தில் அனைத்து பணிகளையும் நிறுத்துமாறு அமைச்சகம் CCDC க்கு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம், இதில் முறைகேடு நடந்ததாக சந்தேகிக்க வேண்டாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த வாரம் தான் மோசமான பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார செயல்திறன் கொண்ட நிறுவனங்களுக்கான அபராதங்களை MOM உயர்த்தியது. அதிகபட்சம் $5,000 வரை அபராதம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ஒரு இந்திய ஊழியர் வாழ்க்கையை தொடங்க வேண்டிய நேரத்தில் தன் உயிரை இழந்திருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts