TamilSaaga

தங்களுக்கே தெரியாமல் ஏலம் விடப்பட்ட இந்திய பெண்கள் – கணக்குகளை முடக்கும் GitHub

அண்டை நாடான இந்தியாவில் தங்களுக்கே தெரியாமல் பல பெண்கள் இணையத்தில் ஏலத்திற்கு விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தற்போது இந்திய காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

50க்கும் மேற்பட்ட பெண்களின் படங்கள் அவர்களுக்கே தெரியாமல் இணையதளம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பெண்களை அவமதிக்கும் சொற்கள் மற்றும் அவர்களின் படங்கள் வர்ணனை செய்யப்பட்டு GitHub எனும் இணையத்தில் அந்த படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

ஹானா மொஹ்சின் கான் எனும் விமானிக்கு அவரது நண்பர் சொல்லித்தான் தனது படம் அத்தகைய தளத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் ஒரு அடிமை என குறிப்பிடப்பட்டு ஏலம் விடப்பட்டது நினைத்தால் இப்போதும் கோபம் வருவதாக AFP செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்த பயனீட்டாளர்களின் கணக்கை தற்பொழுது முடக்கியுள்ளது அந்த இணையதளம். தொந்தரவு செய்தல், பாகுபாடு பார்த்தல், வன்முறையை தூண்டும் வகையில் செயல்படுதல் ஆகிய தரநிலைகளை மீறியதாக நிறுவனம் கூறியுள்ளது.

புது தில்லி காவல் துறையும் வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஆனால் இந்த குற்றச்செயலை செய்தவர்கள் யார் என்று தற்போது அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts