இன்னும் ஒரேயொரு ஆண்டு தான் பாக்கி, 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்க.. ஆனால், அதற்குள் இருதரப்புக்குள் ஏற்பட்ட சர்ச்சையால் சிங்கப்பூர் இந்தியா சங்கம் மூடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் இந்தியா சங்கத்தின் வரலாறு மிகத் தொன்மையானது. 1923ஆம் ஆண்டு இந்த சங்கம் தொடங்கப்பட்டது. சிங்கப்பூரின் பாலஸ்டியர் சாலையில் அமைந்துள்ள அதன் கட்டடத்திற்கு, 1950ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போன்றோர் சிங்கப்பூர் வந்திருந்த போது, இந்த சங்க கட்டிடத்திற்கு வந்திருக்கின்றனர்.
சிங்கப்பூர் இந்தியர்களின் சமூக, கலாசார, உடல், அறிவாற்றல், பொது நலனைக் கருத்தில் கொண்டு அவற்றை மேம்படுத்தவும் ஊக்குவிக்கும் நோக்கில் இச்சங்கம் தொடங்கப்பட்டது.
இத்தனை ஆண்டுகளாக இரு இந்தியா – சிங்கப்பூர் மக்களிடையே ஒரு நல்ல பாலமாக இருந்து செயல்பட்டது சிங்கப்பூர் – இந்தியா சங்கம். இதனால், இரு தரப்பிலும் பலர் பயனடைந்து இருக்கின்றனர். இன்னமும் பயன் அடைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், சமீபகாலமாகவே இரு தரப்பிலும் உரசல் போக்கு நீடித்து வந்ததாக தெரியவருகிறது. இந்த சூழலில் தான் தற்போது சங்கமே இழுத்து மூடப்பட்டுள்ளது.
இதற்கான காரணமும் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் முரசு வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த சனிக்கிழமை அன்று சிங்கப்பூர் இந்தியா சங்கத்தில் ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது உறுப்பினர்கள் சிலர், பல்வேறு விஷயங்களில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் அதில் தெளிவுபெற கேள்விகள் எழுப்பினர். அதன் காரணமாக நிர்வாகக் குழு கூட்டத்தை ஒத்திவைத்ததாக தெரிகிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில், இந்த சங்கத்தின் தலைவர் விஷ்ணு பிள்ளை தரப்பிற்கும் துணைத் தலைவர் தமிழ் மாறன் தரப்பிற்கும் இடையில் இந்தமோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், நிர்வாகக் குழு அந்த விளக்கங்களுக்கு சட்ட ஆலோசனை பெற்று வருவதாகச் சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் விஷ்ணு பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்க உறுப்பினர்கள் உணர்ச்சி வசப்பட்டு இருப்பதை தாம் அறிவதாகவும் அதனால் நிர்வாகக் குழு சங்கத்தை மூட முடிவு செய்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
சங்கம் தற்போது மூடப்படுவதோடு அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்றும் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையிலாவது இந்த நிலை நீடிக்கும் என்றும் நம்புவதாக அறிக்கையில் அவர் கூறியுள்ளார். சங்கத்தின் வெவ்வேறு பொறுப்புகளுக்கும் நிர்வாகத்திற்கும் யார் யார் பொறுப்பேற்பது என்பது குறித்து தெளிவு பெறவேண்டியுள்ளதையும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
இரு தரப்பிலும் பிரச்சனைகள் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவினாலும் இந்த சங்கத்தின் மீது அனைவரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர் என்பதை நான் அறிவேன் என்று தலைவர் விஷ்ணு பிள்ளை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.