அண்டை நாடான இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வணிகரீதியான சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை வரும் ஜனவரி 31 2022 வரை நீட்டித்துள்ளது, இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலையும் அந்நாட்டு விமான போக்குவரத்துறை வெளியிட்டுள்ளது. பெருந்தொற்று வைரஸ் மாறுபாடாக தற்போது உருவெடுத்துள்ள ஓமிக்ரான் மீது அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) சேவைகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்த ஒரு வாரத்திற்குள் கடந்த டிசம்பர் 1 அன்று, டிசம்பர் 15 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க வேண்டாம் என்று முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
ஒழுங்குமுறை ஆணையம் நேற்று வியாழக்கிழமை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, அதில் “திட்டமிடப்பட்ட சர்வதேச வணிக பயணிகள் சேவைகளை இந்தியாவிற்கும் அதற்கு வெளியேயும் செல்வதை நிறுத்துவதை வரும் ஜனவரி 31, 2022 23:59 மணி நேரம் வரை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது.
தொற்றுநோய் காரணமாக இந்தியாவில் மார்ச் 23, 2020 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மே 2020 முதல் வந்தே பாரத் மிஷன் மற்றும் ஜூலை 2020 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுடன் இருதரப்பு “Air Bubble” ஏற்பாடுகளின் கீழ் சிறப்பு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன என்பதும் நினைவுக்கரத்தக்கது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, பூடான் மற்றும் பிரான்ஸ் உட்பட சுமார் 32 நாடுகளுடன் இந்தியா “Air Bubble” ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளது.
இரு நாடுகளுக்கிடையேயான இந்த் ஒப்பந்தத்தின் கீழ், சிறப்பு சர்வதேச விமானங்களை அவற்றின் பிராந்தியங்களுக்கு இடையே அவர்களின் விமான நிறுவனங்களால் இயக்க முடியும். அதே சமயம் இந்த சர்வதேச விமான தடை நீட்டிப்பு காரணமாக சிங்கப்பூரின் VTL சேவையோ அல்லது வந்தே பாரத் திட்டத்திலோ எந்தவித மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக மக்கள் VTL சேவைகளை பயன்படுத்தலாம்.