நேற்று ஜூலை 31 அன்று சிங்கப்பூர் காவல் படை வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், 15 முதல் 74 வயதுக்குட்பட்ட 315 ஆண்களும் பெண்களும் பல மோசடி வழக்குகள் குறித்து தங்களுக்கு விசாரணையில் உதவி வருவதாக அந்த பதிவில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விசாரணையில் 2021 ஜூலை 17 முதல் 30 வரை இரண்டு வார கால ஆய்வில் மொத்தம் 218 ஆண்களும் 97 பெண்களும் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் வணிக விவகாரத் துறை மற்றும் ஏழு காவல் நிலப் பிரிவுகளின் அதிகாரிகள் ஈடுபட்டனர். சந்தேகிக்கப்படும் நபர்கள் 926க்கும் மேற்பட்ட மோசடிகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது, இதில் முக்கியமாக இணைய காதல் மோசடிகள், இ-காமர்ஸ் மோசடிகள், சீன அதிகாரிகள் போல ஆள்மாறாட்ட மோசடிகள், முதலீட்டு மோசடிகள், வேலைவாய்ப்பு மோசடிகள், போலி சூதாட்ட மேடை மோசடிகள், கடன் மோசடிகள் ஆகியவை அடங்கும்.
இந்த மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 8.1 மில்லியன் வெள்ளி அளவிற்கு மோசடி செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
மோசடி குற்றங்களுக்காக சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகின்றனர். குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 ன் கீழ் மோசடி செய்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மோசடிகள் குறித்த கூடுதல் தகவலுக்கு, www.scamalert.sg என்ற தளத்தை அணுகலாம்.
மேலும் ஊழல் எதிர்ப்பு ஹாட்லைனை 1800-722-6688 என்ற எண்ணில் அழைக்கலாம். இதுபோன்ற மோசடிகள் குறித்து தகவல் தெரிந்த எவரும் 1800-255-0000 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.