இனி சிங்கப்பூருக்கு குறுகிய கால விசிட் பாஸ்களில் வரும் (Short Term Visit Pass) வெளிநாட்டுப் பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழையும்போது அவர்களின் பாஸ்போர்ட்டில் “முத்திரைகள் (Stamping)” எதுவும் இனி இடப்படமாட்டாது என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 11) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மை இடப்பட்ட ஒப்புதல்களுக்குப் பதிலாக அவர்களுக்கு மின்னணு வருகை அனுமதிச் சீட்டுகள் (இ-பாஸ்கள்) வழங்கப்படும் என்றும் ICA அறிவித்துள்ளது.
நமது சிங்கப்பூர் படிப்படியாக தனது எல்லைகளை மீண்டும் திறக்கும் இந்த நேரத்தில், இந்த புதிய நடவடிக்கையானது, “மிகவும் பாதுகாப்பான, மற்றும் தடையற்ற குடியேற்ற வசதிகளை வெளிநாட்டு பயணிகளுக்கு வழங்குவதற்கான ICAன் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்” என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த மின்னணு பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் இது வழங்கப்படும் என்று ICA தெரிவித்துள்ளது.
Short Term Visit Pass மூலம் பயணிகள் சிங்கப்பூர் வந்து குடியேற்றத்தை முடித்ததும், பயணிகளின் வருகை அட்டையில் உள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு இந்த பாஸ்கள் உடனடியாக அனுப்பப்படும். அந்த பயணி சிங்கப்பூரில் அதிகபட்சமாக எத்தனை நாட்கள் தங்கியிருக்க முடியும்? மற்றும் சிங்கப்பூரில் இருக்க அவருக்கு அனுமதிக்கப்பட்ட கடைசி நாள் என்ன? உட்பட அனைத்து விவரங்களும் வழங்கப்பட்ட விசிட் பாஸின் இருக்கும்.
இந்த முன்முயற்சிக்கு ஆதரவாக, ICA ஒரு Enquiry போர்ட்டலையும் தொடங்கியுள்ளது, அங்கு பார்வையாளர்கள் தங்கள் குறுகிய கால வருகைப் பதிவுகளை சரிபார்த்துக்கொள்ளலாம். “இ-பாஸ் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம், குறுகிய கால விசிட் பாஸில் உள்ள அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும், Stamping செய்ய தங்கள் பாஸ்போர்ட்டில் பக்கங்கள் இல்லை என்று கவலைப்படவேண்டாம்” என்று ICA தெரிவித்துள்ளது. நிச்சயம் ICA பயணிகளுக்கு தரும் ஒரு Digital Gift இதுவென்றே கூறலாம்.
இந்த இ-பாஸ் முயற்சியை செயல்படுத்துவது தானியங்கு குடியேற்றத்தை (Automated Immigration) நோக்கிய அதன் மாற்றத்தின் முக்கிய பகுதியாகும் என்று ICA தெரிவித்துள்ளது. NCC என்று அழைக்கப்படும் New Clearance Conceptன் முக்கிய உந்துகோலாக இந்த E-Pass உள்ளது என்றும் ICA தெரிவித்துள்ளது.