TamilSaaga

‘சிங்கப்பூரில் இருந்து… அவரு மவன் மாசம் 1 லட்சம் அனுப்புறான்.. இவரு மவன் 2 லட்சம் அனுப்புறான்னு’ சொல்வாங்க… நம்பாதீங்க!

சிங்கப்பூருக்கு எப்படியாவது அடிச்சு புடிச்சு போய், ஒரே வருஷத்துல கடனை எல்லாம் அடைத்து, சொத்து சேர்த்து… etc., etc., என்று நினைப்பவர்களின் கனவை, நம்பிக்கையை கெடுக்காமல், அதே சமயம் எதார்த்த நிலையை புரியவைக்கும் கட்டுரை இது.

குறிப்பாக, S-Pass மற்றும் Employment Pass-ல் சிங்கப்பூருக்கு வருபவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? அவர்களின் உண்மையான சம்பளம் என்ன? அவர்களால் எவ்வளவு சேமிக்க முடிகிறது? எவ்வளவு ஊருக்கு அனுப்ப முடிகிறது? போன்ற தகவல்களின் யதார்த்த நிலையை இங்கு காணலாம்.

S-Passல் நீங்க சிங்கப்பூர் போக வேண்டுமெனில், குறைந்தபட்சம் ஒரு டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். E-Pass-க்கு கட்டாயம் ஒரு டிகிரியாவது முடித்திருக்கணும். அப்போது தான் நீங்கள் இதற்கு அப்ளை செய்ய முடியும்.

ஏஜென்சி மூலம் செல்கையில் S-Pass-க்கு 6000 சிங்கப்பூர் டாலர் முதல் 8000 சிங்கப்பூர் டாலர் வரை கட்டணமாக பெறுகிறார்கள். இந்திய ரூபாயில் சொல்ல வேண்டுமெனில், குறைந்தபட்சம் மூன்றரை லட்சமாவது நீங்கள் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். அதுவே, உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முதலாளியிடம் நேரடியாகவே Resume அல்லது இதர ஆவணங்களை கொடுக்க முடிகிறது எனில், இந்திய ரூபாயில் 50,000 – 75,000க்குள்ளாகவே செலவு முடிந்துவிடும். ஆனால், அரிதிலும் அரிதாக சிலருக்கு மட்டுமே அப்படி அமைகிறது. ஆனால், பெரும்பாலானோர் ஏஜென்சி மூலமாகத் தான் சிங்கப்பூர் வருகிறார்கள்.

S-passல் விசா அப்ளை செய்வதற்கு முன்பே, சம்பளம் எவ்வளவு என்பதை ஏஜென்சியில் சொல்லி விடுவார்கள். சிங்கப்பூர் அரசின் விதிகளின் படி சம்பளம் கிடைக்குமா என்றால் நிச்சயம் பதில் “கிடையாது” என்பது தான்.

சரி.. அப்படி அடிச்சு புடிச்சு மூன்றரை லட்சம், நாலு லட்சம்-னு செலவு செய்து S-passல் சிங்கப்பூர் வருபவர்களுக்கு சராசரியாக கிடைக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 1200 டாலர்கள் தான். அதிகமாகவும் சொல்லவில்லை.. குறைவாகவும் சொல்லவில்லை. ஆவரேஜாக சொல்ல வேண்டுமெனில், 1200 டாலர்கள் தான் ஊதியமாக கொடுக்கப்படுகிறது. இது தான் இங்கு கள எதார்த்தம்.

சிங்கப்பூரில் பெரும்பாலான நிறுவனங்கள் S-passல் வருபவர்களுக்கு இதைத்தான் ஊதியமாக கொடுக்கிறார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான நிறுவனங்கள் மட்டுமே இதைவிட அதிகமாக.. அதாவது 1500, 1600, 1700 டாலர்கள் என்று ஊதியம் கொடுக்கின்றன. அதேசமயம், எந்த வேலையை பார்க்க சிங்கப்பூர் வருகிறீர்களா, அதில் நீங்க மிக Expert-ஆக இருக்கும் பட்சத்தில், அதை உங்கள் முதலாளியின் கவனத்துக்கு எப்படியாவது கொண்டு செல்லும் பட்சத்தில், 2000 டாலர்கள் கூட சம்பளம் கிடைக்க வாய்ப்புண்டு. அதேபோல், இந்தியாவில் நீங்கள் ஏற்கனவே ஏதேனும் ஒரு பெரும் நிறுவனத்தில் வேலை செய்து 5 அல்லது 6 வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருக்கிறீர்கள் என்றால் S-pass-க்கான முழு சம்பளம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஏஜென்சி மூலம் வருபவர்கள், இவை எதையும் எதிர்பார்க்கவே முடியாது.

மேலும் படிக்க – ‘சுண்டு விரலைத் தவிர எல்லாம் போச்சு’… ஊருக்கு செல்ல முடியாமல்.. வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக ஊழியர் – கையெடுத்து கும்பிட்டு கதறும் சோகம்!

சிங்கப்பூருக்கு S-Passல் வேலைக்கு வரும் பெரும்பாலானோர், அதாவது 70 சதவிகித நபர்கள் வெளியில் அறை எடுத்து தான் தங்கியிருக்கின்றனர். 30 சதவிகிதம் பேர் மட்டுமே கம்பெனியே கொடுக்கும் அறைகளில் தங்கியுள்ளனர்.

புதிதாக S-Passல் வருபவர்களுக்கு ஒரு வருட காலம் மட்டுமே சிங்கப்பூரில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள். அது உங்கள் விசாவிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். ஒருவேளை ஏற்கனவே Experience இருந்தால், 2 வருட permit கிடைக்க வாய்ப்புள்ளது.

Rooms Arrangements முடிந்ததற்கு பிறகு, Medical, Safety Orientation Course மற்றும் MOM Approval வாங்குவதற்கான Thumb Print ஆகிய அனைத்து நடைமுறைகளையும், சிங்கப்பூரில் நீங்கள் வேலைக்கு வந்த 14 நாட்களுக்குள்ளாகவே உங்கள் முதலாளி செய்து முடித்துவிடுவார்.

இவை அனைத்தும், பெருந்தொற்று காலத்துக்கு முன்பு, S-Passல் சிங்கப்பூர் வருபவர்கள் பின்பற்றும் நடைமுறையாகும். இப்போது, சிங்கப்பூர் வந்தால் அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, புதிய விதிமுறைகளின் படி அதை செய்த பிறகு, இந்த நடைமுறைகள் தொடங்கும். ஆனால், S-Pass-க்கான பொதுவான நடைமுறைகள் என்றால் இதுதான்.

புதிதாக S-Passல் வருபவர்களுக்கு ஏஜென்சியில் சொல்லும் வேலை தான் கொடுக்கப்படுமா? என்றால்… “இல்லை” என்று தான் சொல்ல வேண்டும். பணம் அதிகமாக செலுத்துவதால், உங்களை எப்படியாவது அனுப்பினால் போதும் என்று ஏஜென்சிகள், ‘இதுதான் வேலை’.. ‘இவ்ளோ தான் வேலை’ என்று எதையாவது சொல்வார்கள். ஏனெனில், உங்களை சிங்கப்பூருக்கு Packing செய்து அனுப்புவதே அவர்களின் ஒரே குறிக்கோள். (சில மனிதாபிமான ஏஜென்சிகளும் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது!).

அதேசமயம், இந்த இடத்தில் ஏஜென்சிகளை முழுவதும் குறை சொல்லிவிட முடியாது. அவர்கள் கம்பெனி Profile தான் பார்ப்பார்கள். உள்ளே கம்பெனியில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது எந்த ஏஜென்சிக்காரர்களுக்கும் தெரியாது. சில சமயம், ஏஜென்சியில் என்ன வேலை சொன்னார்களோ, அது மட்டுமே இருக்கும். சில சமயம் அதைத் தாண்டியும் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

இந்த ஒரு வருட காலத்தில், நீங்கள் நன்றாக வேலை செய்து முதலாளியின் நம்பிக்கையை, அபிமானத்தைப் பெற்றால், ஒரு வருடத்திற்கு பிறகு Visa Renewal செய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில சமயங்களில், Visa Renewal செய்ய முதலாளிகள் விரும்பினாலும், S-Pass Quota பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், சிங்கப்பூரில் அரசு அடிக்கடி விதிமுறைகளை மாற்றிக் கொண்டே இருக்கும். சிலர் ஒரு வருடம் ஆகியும், சரியாக வேலை செய்ய முடியாமல் தடுமாறினால், அவர்களை நிச்சயம் முதலாளி திருப்பி அனுப்பிவிடுவார்.

ஆனால், இதில் ஆச்சர்யம் என்னவெனில், 99 சதவிகிதம் தமிழ் ஊழியர்கள் உழைப்பதைத் தவிர வேறு எதுவும் சிங்கப்பூரில் செய்வதில்லை. அவ்வளவு கடுமையான உழைப்பாளிகளாக இருக்கின்றனர். இதனால், பெரும்பாலான முதலாளிகள் அவர்களை தக்க வைக்கவே விரும்புகின்றனர்.

ஆனால், சிங்கப்பூரர்களுக்கும், இங்குள்ள PR-களுக்கும் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக, சிங்கை அரசு, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு S-pass கொடுப்பதில் கெடுபிடிகளை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்போது S-pass வாங்குவது ரொம்பவே கடினம்.

அதேசமயம், முதலாளிகளும் S-pass-ல் ஆள் எடுக்க ரொம்பவே தயங்குகின்றனர். ஏனெனில், சிங்கப்பூர் அரசின் விதிப்படி, S-pass-ல் வேலைக்கு வருவோருக்கு 2,500 வெள்ளி சம்பளம் கொடுக்க வேண்டும். E-Pass-ல் வருவோருக்கு 4,500 வெள்ளி சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால், அவர்கள் சம்பளத்தை குறைத்து தான் தருகிறார்கள். இதனால், S-pass-ல் வேலைக்கு வரும் ஒருவர், ஒரு வருடம் நன்றாக உழைத்து, வேலையை கற்றுக் கொண்டு, இப்போது அதிக Increment கேட்கிறார் என்றால், அங்கு தான் சிக்கல் ஏற்படும்.

நிச்சயம் ஊழியர்கள் கேட்கும் சம்பள உயர்வை முதலாளியால் தர முடியாது. தர முடியாது என்பதை விட, ‘இவ்வளவு உயர்வு கொடுக்கணுமா’ என்று யோசிப்பார். அவர் சொல்லும் உயர்வு அந்த ஊழியருக்கு கட்டுப்படி ஆகாது. அவர் தனது வேலை திறமைக்கு இந்த உயர்வு மிகவும் குறைவு என்று நினைப்பார். இதனால், ‘எங்கே MOM-ல் ஊழியர் புகார் கொடுத்துவிடுவாரோ’ என்று முதலாளிகள் அஞ்சுகின்றனர். இதனாலேயே S-pass-ல் ஆட்கள் எடுக்க யோசிக்கின்றனர்.

S-Pass ஊழியரின் வாழ்க்கை உண்மையில் எப்படி இருக்கிறது?

சரி.. இப்போது S-pass-ல் வேலைக்கு வந்தாச்சு. 1200 வெள்ளி-ன்னு சம்பளமும் உறுதியாச்சு என்று வைத்துக் கொள்வோம். இப்போது அதில் உள்ள செலவுகளை பார்ப்போம்.

சாப்பாடு, முடி வெட்டுதல், டிரஸ் பர்சேஸ், லொட்டு லொசுக்கு என்று அனைத்து தேவைகளுக்கும் மிக மிக சிக்கனமாக செலவு செய்திருந்தால், 800 – 900 டாலர் மீதமிருக்கும். மீண்டும் சொல்கிறேன்.. இந்த மீதம் என்பது, மிக மிக சிக்கனமாக செலவு செய்பவர்களுக்கானது தான். ‘தாம்தூம்’ என்று செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் லிஸ்ட்டே தனி. கையில் 200 டாலர் மிஞ்சுவதே அரிது. இதுதான் புதிதாக S-passல் சிங்கப்பூர் வருபவர்களின் நிலை.

இன்னொரு மிக முக்கியமான விஷயம். “அவரு மவன் சிங்கப்பூருல இருந்து மாசம் 1 லட்சம் அனுப்புறான்.. இவரு மவன் மாசம் 2 லட்சம் அனுப்புறான்” என்று உங்கள் ஊரில் யாரோ சொல்வதைக் கேட்டு சிங்கப்பூர் வந்து ஏமாறாதீர்கள். S-passல் வந்தாலும், உங்களுக்கு நான் முன்பு சொன்னது போல் சராசரியாக 1200 டாலர் தான் ஊதியம் கிடைக்கும். உங்கள் செலவெல்லாம் போக, மாதம் 30 ஆயிரம் – 50 ஆயிரம் வரை அனுப்ப முடியும். அவ்வளவு தான். லட்சங்களில் எல்லாம் அனுப்ப முடியாது.

S-passல் வேலைக்கு போனால், உட்கார்ந்து காலாட்டிக் கொண்டே சம்பாதித்து விடலாம் என்றும் தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள். அதாவது, Professional Job-ஆக இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இங்கே எல்லாவித வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கும். மாதம் 1 லட்சம், ஒன்றரை லட்சம் பணம் அனுப்புகிறார்கள் என்றால், அவர்கள் சிங்கப்பூர் வந்து ஏழெட்டு வருடம் கடுமையாக உழைத்து அந்த நிலைக்கு வந்திருப்பர்கள். ச்சும்மா வந்தவுடன் அப்படி இங்கே சம்பாதிக்க முடியாது.

குறைந்தது 3 வருடமாவது நீங்கள் இரவு பகல் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். பணம் சேமிப்பு என்பதைப் பற்றியெல்லாம் பெரிதாக கனவு காண முடியாது. 3 வருடத்திற்கு பிறகு தான் உங்களால் ஓரளவு Stable and Steady ஆக முடியும்.

குறைந்தது 4 லட்சம் செலவு செய்து S-passல் சிங்கப்பூர் வரும் நீங்கள், வாங்கிய கடனை அடைக்க குறைந்தபட்சம் ஒரு வருடம் போராட வேண்டியிருக்கும். 2 வருடம் கூட ஆகலாம். வாங்கிய கடனின் வட்டி, குட்டியெல்லாம் என எல்லாவற்றையும் அடைத்து முடித்து மூச்சு விடுவதற்கு நிச்சயம் 2 – 3 வருடங்கள் ஆகலாம். அது உங்கள் தனித்தன்மையை பொறுத்து, ஆடம்பர செலவுகள் இல்லாமல் சிங்கப்பூரில் நீங்கள் நாட்களை கடத்தினால், உங்கள் கடன் அதுவாக அடைந்துவிடும்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் இருந்து.. விடுமுறைக்கு சென்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கு அழைப்பு.. தினசரி சம்பளத்தை அதிகரித்த நிறுவனங்கள் – “Game Changer” அறிவிப்பு

இந்த இடத்தில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். உங்களால் முடிந்தால், கடன் வாங்காமல் சிங்கப்பூர் வர முயற்சி செய்யுங்கள். அப்படி கடன் வாங்காமல் சிங்கப்பூர் வந்தால், முதல் மாதம் முதலே நீங்கள் வாங்கும் சம்பளம் சேமிப்பு தான். அதை வைத்துக் கொண்டு, சிங்கப்பூரில் Workers-காக இருக்கும் பல Course-களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து படியுங்கள். அவை சிங்கப்பூரில் உங்கள் பணி உயர்வை இன்னும் எளிதாக்கும். நீங்கள் வேலைப் பார்க்கும் நிறுவனத்திலேயே பணி உயர்வு பெறலாம். அல்லது வேறு ஒரு நிறுவனத்துக்கு அதிக சம்பளத்துடன் பணி மாற்றம் பெறலாம்.

ஆனால், துரதிர்ஷடம் என்னவெனில், சிங்கப்பூர் வரும் 97 சதவிகித ஊழியர்கள் கடன் வாங்கித் தான் வருகிறார்கள். 2 வருடம் கடனோடு வாழ்ந்துவிட்டு, அதன் பிறகு ஊருக்கு செல்வது, மீண்டும் கடன் வாங்குவது, மீண்டும் அதை அடைக்க உழைப்பது என்று தங்கள் வாழ்நாளை எந்தவித திட்டமிடலும் இன்றி வீணடிக்கிறார்கள். அல்லது அவர்களது சூழல், அப்படி வீணடிக்க வைக்கிறது. இது தான் S-Passல் வருபவர்களின் நிலைமை.

அதேபோல், S-passக்கும், Employment Passக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. S-pass-ல் 2,500 வெள்ளி சம்பளம் கொடுப்பதாக அரசுக்கு காட்டுவார்கள். E Pass-ல் 4,500 வெள்ளி சம்பளம் கொடுப்பதாக கணக்கு காட்டுவார்கள். அளவுதான். ஆனால், கையில் கொடுப்பதோ 1500, 1600 வெள்ளி தான். ஆனால், S-pass கூட கிடைத்துவிடும். E Pass கிடைக்கவே கிடைக்காது. தலைகீழ் நின்று தான் தண்ணீர் குடிக்கணும். E Pass-க்கு அப்ளை செய்தாலும், S-pass தான் கிடைக்கும். S-pass-ல் இங்கு வந்து வேலை செய்து Experience பெற்ற பிறகு தான் E Pass கிடைக்க வாய்ப்புள்ளது.

எது எப்படியிருந்தாலும், திட்டமிடலோடு சிங்கப்பூர் கனவை காணுங்க. முடிந்த அளவு கடன் வாங்காம வாங்க. அப்படி முடியலைனாலும், முழுசா கடன் வாங்காம, பாதியளவு கடன் வாங்குற அளவுக்காவது பாருங்க. ஏன்னா. 4 லட்சம் கடன் வாங்கி நீங்க அதை வட்டியோடு அடைக்குறதுக்குள்ள வருஷங்களாகிடும். அதேசமயம், தெளிவான, நேர்த்தியான புரிதலோடு சிங்கப்பூர் வந்தால், நிச்சயம் உங்கள் கனவு நிறைவேறும் என்பதிலும் சந்தேகம் வேண்டும். ஒரு செட் டிரஸ்ஸோடுவந்தவர்களை, ஜவுளிக்கடையே வைக்கும் அளவுக்கு உயர்த்தியதும் இதே சிங்கப்பூர் தான்.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts