TamilSaaga

சிங்கப்பூர் விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கட்டுப்பாடுகள் என்னென்ன? – புள்ளி விவரத்துடன் இதுவரை நீங்கள் அறியாத ஒரு Complete Report

தென்கிழக்கு ஆசியாவின் வளமான நாடுகளில் முக்கியமானது சிங்கப்பூர். புதிய தொழில் தொடங்க ஏற்ற சூழலைக் கொண்டு விளங்கும் நம் சிங்கப்பூரின் விதிகள் தொழில்முனைவோர், வேலைக்காக இங்கு வருவோருக்குப் பல்வேறு பயன்களை அளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. சிங்கப்பூரில் புதிதாக தொழில் தொடங்கவோ அல்லது வேலைக்காக வரும் புரஃபஷனல்கள், அரசின் வேலைக்கான விசா அல்லது வொர்க் பெர்மிட்டைப் பெற்ற பிறகு இங்கு தங்கி பணியாற்ற முடியும்.

அப்படி சிங்கப்பூரில் புதியதாகத் தொழில் தொடங்க அல்லது வேலைக்காக வர நினைக்கும் இந்தியர்களுக்கான செய்திதான் இது. சிங்கப்பூர் வொர்க் பாஸ் அல்லது வொர்க் பெர்மிட் என்றால் என்ன.. அதை விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், ஆவணங்கள் என்னென்ன, சிங்கப்பூர் அரசு அளிக்கும் பல்வேறு வகையான வொர்க் பாஸ் அல்லது பெர்மிட்டின் நடைமுறைகள் பற்றிதான் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்துடன் மோதல் ஏற்பட்டால் இழப்பின்றி மீள்வது எப்படி? அதன் சாதக, பாதகம் என்ன? – Complete Report

சிங்கப்பூர் விசா

சிங்கப்பூர் வந்து நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ பணியாற்ற விரும்புவோர் சிங்கப்பூர் அரசிடம் விண்ணப்பித்து வொர்க் பெர்மிட் (பொதுவாக விசா என்றழைக்கப்படுகிறது) பெற்ற பிறகே இங்கு பணியாற்ற முடியும். வெளிநாட்டினரைப் பணிக்கு அமர்த்த விரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்கள் முறையான அனுமதிக்கான விசாவைப் பெற்ற பிறகு பணியில் அமர்த்திக் கொள்ள முடியும்.

தொழில் முனைவோர் மற்றும் புரஃபஷனல்களுக்கான விசா

வேலையின் இயல்பைப் பொறுத்து சிங்கப்பூர் வரும் வெளிநாட்டினருக்கு, அரசின் மனிதவளத் துறை (the Minister of Manpower, Singapore) பல்வேறு வகையான விசாக்களை வழங்குகிறது.

புரஃபஷனல்களுக்கான வொர்க் விசா – வகைகள்

Employment pass

அதிக அளவு ஊதியம் பெறும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர், மேனேஜர், எக்ஸிகியூட்டிவ்கள் போன்ற உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விசா இது. முதலில் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும்படி வழங்கப்படும் இந்த விசா, குறிப்பிட்ட நபர் சிங்கப்பூரில் இருக்கும் வரை இதை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. வரையறுக்கப்பட்ட தொழில்களில் நல்ல திறனும் அனுபவமும் பெற்றவர்கள் இந்த விசாவுக்காக விண்ணப்பிக்க முடியும். இந்த வொர்க் பெர்மிட் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சிங்கப்பூர் குடியுரிமைக்கும் விண்ணப்பிக்க முடியும்.

EntrePass

EntrePass (Entrepreneur Pass) என்பது சிங்கப்பூரில் புதிய தொழில் தொடங்கி நடத்த முன்வரும் தொழில்முனைவோர்களுக்கு வழங்கப்படுவது. தொடக்கத்தில் ஓராண்டு செல்லுபடியாகும் இந்த விசாவைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். தொழில் முனைவோர்கள், இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கும் நாளில் இருந்து 6 மாத காலத்துக்கு முன்பாகத் தங்கள் நிறுவனத்தை முறையாகப் பதிவு செய்திருக்க வேண்டும். இந்த விசாவைப் பெற்றவர்களும் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சிங்கப்பூர் குடியுரிமைக்கும் விண்ணப்பிப்பதற்கான தகுதியைப் பெறுவார்கள்.

Personalized Employment Pass

சிங்கப்பூரில் பணியாற்ற ஏற்கனவே வொர்க் பெர்மிட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் விசா இது. வெளிநாட்டு புரஃபஷனல்கள் பிரிவின் கீழ் வழங்கப்படும் இந்த விசா வைத்திருப்பவர்கள், தங்கள் வேலை செய்யும் நிறுவனங்களை மாற்றும்போது மீண்டும் வொர்க் பெர்மிட்டுக்காக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம், இந்த விசா வைத்திருப்பவர்கள் புதிதாகத் தொழில் எதுவும் தொடங்க அனுமதியில்லை. அதிக ஊதியம் ஈட்டும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் இந்த விசா 3 ஆண்டுகள் செல்லுபடியாகும். அதன் பின்னர் புதிய விசாவுக்குத்தான் விண்ணப்பிக்க முடியும்; இதை புதுப்பிக்க முடியாது.

skilled and semi-skilled workers-க்கான விசா

S Pass

மிட் லெவல் ஸ்கில்டு தொழிலாளர்களுக்கான விசா இது. மாதம் 2500 சிங்கப்பூர் டாலர்கள் அளவுக்கு ஊதியம் பெறுபவர்கள் இந்த விசாவுக்காக விண்ணப்பிக்க முடியும். முதலில் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும்படி வழங்கப்படும் இந்த விசா, குறிப்பிட்ட நபர் சிங்கப்பூரில் இருக்கும் வரை இதை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. குறைந்தபட்சம் ஒரு டிகிரி/டிப்ளமோ பெற்றவர்களும் குறிப்பிட்ட பிரிவில் சான்றிதழ் படிப்பை நிறைவு செய்தவர்களும் இந்த விசா பெற தகுதியானவர்கள். வேலை கொடுக்கும் நிறுவனத்தின் ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பிக்கும் நபரின் கல்வித் தகுதி ஆகியவற்றை பரிசீலனை செய்தபிறகே S Pass விசா வழங்கப்படும். சிங்கப்பூர் அரசின் Immigration and Checkpoints Authority (ICA)-யின் கவனமான பரிசீலனைக்குப் பிறகு அந்நாட்டு நிரந்தரக் குடியுரிமை பெற முடியும்.

Work permit for foreign workers

கட்டுமானத் துறை, கப்பல் கட்டுமானம், உற்பத்தித் துறை மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகிய துறைகளில் பணியாற்ற விரும்பும் செமி ஸ்கில்டு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விசா.

Work permit for foreign domestic worker

சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்காக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த விசாவைப் பெற்றால் மட்டுமே அங்கு தங்கிப் பணியாற்ற முடியும்.

Work permit for confinement nanny

மலேசியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த விசாவுக்காக விண்ணப்பிக்க முடியும். தங்களது உரிமையாளருக்குக் குழந்தை பிறந்திருக்கும் நிலையில், அதனைப் பராமரிக்கும் வகையில் 16 வார காலத்துக்கு செல்லுபடியாகும் வகையிலான இந்த விசாவைப் பெற முடியும்.

Work permit for performing artists

சிங்கப்பூரில் இருக்கும் பார்கள், ஹோட்டல்கள், பப்கள் ஆகியவற்றில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டுக் கலைஞர்கள் (நடனம், பாடல்) இந்தப் பிரிவின் கீழ் விசா பெற்றுக் கொள்ளலாம்.

பயிற்சி பெறுவோர் மற்றும் மாணவர்களுக்கான விசாக்கள்

Training employment pass

சிங்கப்பூரில் தங்கி நிறுவனங்களில் பயிற்சி பெற விரும்பும் வெளிநாட்டு புரஃபஷனல்கள் இந்த விசாவுக்காக விண்ணப்பிக்கலாம். அவர்கள் குறைந்தபட்சம் மாத ஊதியமாக 3,000 டாலர்கள் பெற வேண்டும் என்பது தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Work holiday pass

18 முதல் 25 வயதுடைய வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் விடுமுறையை வேலை செய்துகொண்டே கழிக்க சிங்கப்பூரைத் தேர்வு செய்தால், இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். ஆறு மாத காலம் மட்டும் இது செல்லுபடியாகும்.

Training work permit

செமி ஸ்கில்டு டிரெய்னிக்கள் அல்லது மாணவர்கள், சிங்கப்பூரில் ஆறு மாத காலம் தங்கியிருந்து பயிற்சி பெறுவதற்கான அனுமதியை இந்த விசா வழங்கும்.

Miscellaneous work pass

வெளிநாடுகளைச் சேர்ந்த பேச்சாளர்கள், மத ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோர் குறுகிய காலம் சிங்கப்பூர் வந்துசெல்ல இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக இந்த விசா பெற்றோர் 60 நாட்கள் வரை தங்கியிருக்கலாம்.

குடும்ப உறுப்பினர்களுக்கான விசா

Dependent’s pass

S pass விசா வைத்திருக்கும் நபரின் மனைவி/கணவன், குழந்தைகளுக்கான விசா.

Long term visit pass

S pass விசா வைத்திருப்பவர்களின் பெற்றோர், கணவன்/மனைவி, குழந்தை (மாற்றுத்திறனாளி குழந்தை) ஆகியோர் இதன் கீழ் விண்ணப்பிக்கலாம்.

Pre-approved letter of consent

சிங்கப்பூர் குடிமகன்கள் அல்லது குடியுரிமை பெற்றவர்களின் கணவன்/மனைவி, குழந்தைகள் இதன் கீழ் விண்ணப்பிக்க முடியும். அந்நாட்டின் Immigration Checkpoints Authority (ICA)-யால் ஏற்கனவே பணியாற்ற அனுமதி பெற்றவர்களாக இவர்கள் இருக்க வேண்டும். Long-term Visit Pass/Long-term Visit Pass+ போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கும்போதோ அல்லது புதுப்பிக்க விண்ணப்பிக்கும்போதோ Pre-approved letter of consent-க்காக விண்ணப்பிக்கலாம்.

Letter of consent

ICA-வால் வழங்கப்பட்ட dependent’s pass அல்லது Long-term Visit Pass/Long-term Visit Pass+ வைத்திருப்பவர்களின் கணவன்/மனைவி அல்லது குழந்தைகளுக்கானது. இதை குறிப்பிட்ட நபருக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கும் நிறுவனம் மூலமே விண்ணப்பித்துப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் வொர்க் விசாவுக்கான தகுதிகள் என்னென்ன?

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூரில் பணியாற்ற விரும்பினால், கீழ்க்கண்ட தகுதிகளைப் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர் உரிய செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் வயது 18 பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
  • ICA-வால் வழங்கப்படும் வொர்க் பெர்மிட்டில் குறிப்பிட்ட வேலை, அதன் வரையறைக்குள் மட்டுமே பணியாற்ற வேண்டும்.

அதேபோல், சிங்கப்பூருக்கு பணி நிமித்தம் வரும் வெளிநாட்டினர் கீழ்க்கண்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

  • புதிதாகத் தொழில் தொடங்கவோ அல்லது தொழில்களின் உரிமையாளராகப் பங்கெடுக்கவோ அனுமதி இல்லை.
  • வொர்க் பெர்மிட் அல்லது வொர்க் பாஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் உரிமையாளரின் நிறுவனத்துக்கு மட்டுமே பணியாற்ற வேண்டும்.
  • சிங்கப்பூரின் குடிமகன் அல்லது குடியுரிமை பெற்றவரை நாட்டுக்குள்ளோ அல்லது வெளிநாடுகளிலோ உரிய அனுமதி பெறாமல் திருமணம் செய்துகொள்ள அனுமதியில்லை.
  • விசாவுக்காக விண்ணப்பிக்கும்போது, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரியில் மட்டுமே விசா காலம் முடியும் வரையில் தங்கியிருக்க அனுமதி.
  • அரசு அதிகாரிகள் எப்போது ஆய்வுக்காக உங்களது பெர்மிட்டைக் கேட்டாலும், காண்பிக்க வேண்டும்.

சிங்கப்பூர் விசாவுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

சிங்கப்பூரில் பணியாற்ற விரும்பும் ஊழியர்களுக்கு, அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள் விசாவுக்காக விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கான வழிகாட்டுதல்கள்

  • வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள் அல்லது EA (ஏஜெண்ட்) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.
  • பணியாளர் வர வேண்டிய நாள் குறித்த தகவல் அளித்தல்
  • பெர்மிட்டைப் பெற்றுக்கொள்ளுதல்
  • பணியாளர்களின் கைரேகை, புகைப்படம் பதிவு
  • நிறுவனங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் கார்டைப் பெற்றுக்கொள்ளுதல்

சீன புத்தாண்டு 2022: சிங்கப்பூரில் தமிழர்களுக்கு இணையாக ஆதிக்கம் செலுத்தும் சீனர்கள் – வியக்க வைக்கும் வரலாறு

விண்ணப்பிக்கும்போது பணியாளர்கள்/ஊழியர்கள் பின்பற்ற வேண்டியவை

  • வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க எழுத்துப்பூர்வமான அனுமதி அளிக்க வேண்டும்.
  • ஆன்லைனில் சிங்கப்பூர் அரசின் Work Permit online இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தல்.
  • ஒவ்வொரு விசாவுக்கும் ஏற்ப 35 டாலரில் இருந்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டணத்தைக் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றி செலுத்துதல்.
  • விண்ணப்பம் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டு விட்டால், ஒரு வார காலத்துக்குப் பின்னர் அதன் நிலையை ஆன்லைனிலேயே நீங்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவல்கள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் சிங்கப்பூர் தூதரகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

இந்தத் தகவல் உங்களுக்கு உபயோகமானதாக இருந்ததா.. கமெண்டில் சொல்லுங்க!

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts