சிங்கப்பூரின் ஜூரோங் பகுதியில், ஹோ சிங் ரோடு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் “வாட்டர் ஹீட்டர்” ஒன்று பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டதால், அங்கு வசித்து வந்த வயதான தம்பதியரும் அவர்களது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 10, 2020 அன்று நடந்த இந்த சோக நிகழ்வில் திரு. உமர் அப்துல் மனன் (வயது 80), அவரது மனைவி அஸ்மா புஜாங் (வயது 66), மற்றும் அவர்களது மகன் முகமது ஆஷிகின் ஓமர் (வயது 45) ஆகியோர் உயிரிழந்தனர். சம்பவத்தன்று அந்த வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டருக்கு மின்சாரம் வழங்க, மின்சார சாக்கெட்டுடன் இணைக்கப்பட்ட Three Pin Plug பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எரிசக்தி சந்தை ஆணையத்தைச் சேர்ந்த மூத்த இணை பொறியாளர் கோ சின் ஃபாங் நீதிமன்றத்தில் பேசுகையில், அந்த ஹீட்டர் “சுவர் பிளக்கிற்குப்” பதிலாக Double Poleசுவிட்சுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
ஆய்வாளர்கள் அந்த வாட்டர் ஹீட்டரின் Three Pin Plugஐ பிரித்து பார்த்தபோது, Neutral மற்றும் Earth கேபிள்கள் ஒன்றாக இணைந்திருப்பதையும் கண்டறிந்தனர். இதன் விளைவாகத்தான், ஹீட்டரில் உள்ள வெப்ப தொட்டிக்கு மின்னோட்டம் மீண்டும் பாய்ந்தது, அது தொட்டியுடன் இணைக்கப்பட்ட ஒரு உலோகக் குழாய்க்கு மின் ஆற்றலை அளித்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறினார்.
குளியலறைக்கு சென்ற திரு. உமர், அந்த குழாயைத் தொட்டவுடன் அவரை மின்சாரம் தாக்கியதாக நம்பப்படுகிறது. மேலும் அவரது மனைவி அஸ்மா அவருக்கு உதவ சென்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட, பிற்பகலில் தனது பிளாட்டுக்கு வந்த திரு. ஆஷிகின், தனது பெற்றோர் நிலைகுலைந்து கிடப்பதை பார்த்துவிட்டு அவர்களில் ஒருவரைத் தொட்டபோது மின்சாரம் தாக்கி அவரும் இறந்துள்ளார்.
மூவரும் இறந்த இந்த சோகத்தைத் தொடர்ந்து, அந்த வயதான தம்பதியினரின் மகள் விசாரணையாளர்களிடம், அந்த ஹீட்டர் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டதாகவும், ஆனால் அதை நிறுவியவர் யார் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் கூறினார். அந்த Three Pin Plug ஓவர்லோடிங் காரணமாக ஒன்றாக இணைந்திருக்கலாம் என்று திரு. கோ விசாரணை அதிகாரி ஆடம் நகோடாவிடம் கூறினார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆரிப் நீதிமன்றத்தில் பேசும்போது, இந்த வழக்கில் முறைகேடு நடந்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரம் இல்லை என்று கூறினார். இந்நிலையில், இந்த வழக்கில் அடுத்த மாதம் தனது தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீட்டர்கள் மூலம் நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் நமது சிங்கப்பூரில் அரிதானவை என்றபோதும், மக்கள் இதை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. குறிப்பாக அதிக அளவிலான தொழிலாளர்கள் சேர்ந்து வாழும் Dormitory போன்ற இடங்களில் ஊழியர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஹீட்டர் என்பது சர்வ சாதாரணமாக மக்களால் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகவே உள்ளது. ஆகையால் Dormitory போன்ற அதிக அளவிலான நபர்கள் சேர்ந்து வாழும் இடங்களில் Heaterகளை பயன்படுத்தும்போது சற்று கவனமாக செயல்படுவது நல்லது.