TamilSaaga

“சிங்கப்பூரில் இலவச வாய் கொப்பளிக்கும் திரவம்” : பிரபல Temasek நிறுவனம் அறிவிப்பு – எப்படி பெற்றுக்கொள்வது?

சிங்கப்பூர் குடும்பங்கள் வரும் நவம்பர் 15ம் தேதி முதல் StayWell நிறுவனத்தின் வாய் கொப்பளிக்கும் திரவத்தை சேகரிக்க தங்கள் ஆர்வத்தை பதிவு செய்யலாம் என்று தேமாசெக் அறக்கட்டளை இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொண்டை புண்ணை உண்டாக்கும் கிருமிகளைக் கொல்லும் போவிடோன்-அயோடின் என்ற அந்த திரவம், நோய்களின் பரவலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அறக்கட்டளையின் முயற்சியின் கீழ் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஆர்வமுள்ள குடும்பங்கள் அந்த 250 மிலி பாட்டில் மற்றும் 25 மிலி அளவிடும் கோப்பையை சேகரிக்க பதிவு செய்யலாம்.
.
இதற்கான பதிவு காலம் என்பது நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரை ஆகும். இத்தற்காக பதிவு செய்த குடியிருப்பாளர்கள் நவம்பர் 22 முதல் டிசம்பர் 12 வரை, தங்களுக்கு அருகில் உள்ள சேகரிப்புப் மையங்களில் அந்த திரவத்தை பெற்றுக்கொள்ளலாம். தேவைகள், எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருந்தால், அடுத்த பிப்ரவரியில் சீன புத்தாண்டு காலத்திற்குப் பிறகு இரண்டாவது சுற்று திரவ வழங்கல் நடைபெறலாம் என்று டெமாசெக் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மேலும் தனித்தனியாக, வரும் திங்கள் முதல் நவம்பர் 19 வரை, ஒன்று முதல் நான்கு அறைகள் கொண்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் தங்கள் கடிதப் பெட்டிகளில் ஒரு சிறிய வாய் கொப்பளிக்கும் திரவ பாட்டிலை பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 125 மிலி பாட்டிலை பெற தகுதியான வீடுகளில் இருந்து எந்த நடவடிக்கையும் செய்ய தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தொண்டை புண் உருவாகும் அல்லது வாயின் சுகாதாரத்திற்காக குடியிருப்பாளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு முறை வாய் கொப்பளிக்கலாம்.

Related posts