TamilSaaga

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்த நான்கு வெளிநாட்டவர்களை அதிகாரிகள் கைது!

சிங்கப்பூர், மே 19: சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த நான்கு இந்தோனேசியர்களை சிங்கப்பூர் காவல்துறையும், குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையமும் (ICA) நேற்று (மே 18) கைது செய்துள்ளனர்.

சம்பவத்தன்று அதிகாலை, சிங்கப்பூர் கடலோரக் காவல்படையினர் (Police Coast Guard) புலாவ் டெகோங் தீவின் சுற்றுச்சுவருக்கு வெளியே ஒரு சிறிய படகில் நால்வர் கடல் வழியாக சிங்கப்பூருக்குள் நுழைவதை கண்டறிந்துள்ளனர். 28 முதல் 50 வயதுடைய அந்த நான்கு நபர்களும் படகிலிருந்து இறங்கியவுடன், கடலோரக் காவல்படை, கூர்க்கா படைப்பிரிவு (Gurkha Contingent), சிறப்பு நடவடிக்கைக் கட்டளைப் பிரிவு (Special Operations Command) மற்றும் கே-9 பிரிவு அதிகாரிகள் இணைந்து அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் எவ்வித பயண ஆவணங்களும் இல்லை என்று காவல்துறையும் ICAவும் தெரிவித்துள்ளது. மேலும், அவர்கள் வைத்திருந்த படகிலிருந்து 2,700 கட்டுகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளும், இயந்திரம் பொருத்தப்பட்ட ஃபைபர் கிளாஸ் படகும் பறிமுதல் செய்யப்பட்டன.

சிங்கப்பூரில் வேலை தேடுகிறீர்களா? உங்கள் கனவு வேலை அமேசானில் உங்களுக்காக காத்திருக்கிறது!

கைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் இன்று (மே 19) நீதிமன்றத்தில் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த குற்றத்திற்காக ஆஜர்படுத்தப்பட உள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தது மூன்று பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் கடலோரக் காவல்படை மற்றும் சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய கடலோரக் காவல்படைத் தளபதி, மூத்த உதவி ஆணையர் ஆங் எங் செங், “சிங்கப்பூர் கடல் எல்லைகளையும், பிராந்திய நீர்ப்பரப்புகளையும் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதில் ICAவுடன் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கை ஒரு சிறந்த உதாரணமாகும். சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைவது அல்லது இங்கிருந்து வெளியேறுவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், அல்லது அதற்கு உதவி செய்பவர்கள் சட்டத்தின் முழு வீச்சையும் சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ளார்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts