TamilSaaga

சிங்கப்பூரில் தடல் புடலாக வாழை இலையில் புரட்டாசி விருந்து… வயிறார உண்டு மகிழ்ந்த வெளிநாட்டவர்கள்!

வீட்டு சாப்பாட்டினை மறந்து ஓயாது உழைக்கும் வெளிநாட்டவர்களை போற்றும் வகையில் கடந்த சனிக்கிழமை இந்து அறக்கட்டளை வாரியமும், வெளிநாட்டு ஊழியர்கள் நிலையமும் சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக மதியநேர விருந்தினை ஏற்பாடு செய்திருந்தது. ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள மண்டபத்தில் அளிக்கப்பட்ட மாபெரும் புரட்டாசி விருந்தில் கிட்டத்தட்ட 2000 பேர் வயிறார உணவு உண்டு மகிழ்ந்தனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவை செயற்குழு தலைவர் சுசிலா கணேசன் கூறுகையில் சிங்கப்பூர் நாட்டில் கட்டிடம் கட்டுவதில் இருந்து, சாலைகள் அமைப்பது, வீட்டு வேலை செய்வ,து உணவகங்களில் வேலை செய்வது மற்றும் பல்வேறு தொழில்களை புரியும் வெளிநாட்டவர்களுக்கு ஒரு வேலையாவது வயிறார உணவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த விருந்தில் பரிமாறுதல், சமையல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொண்டு செய்தனர் எனவும் தெரிவித்தார். பொதுவாக இந்தியாவில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபட்டு சனிக்கிழமை விரதம் இருந்து புரட்டாசி விருந்து படைப்பது வழக்கம். அந்த வழக்கத்தில் இங்கு பணி புரியும் வெளிநாட்டவர்களுக்கும் விருந்திட நினைத்ததாக அவர் கூறினார். இது குறித்து உணவு உண்டு மகிழ்ந்த தொழிலாளர்கள் கூறியதில் பல ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வரும் எங்களுக்கு இந்த விருந்து உட்கொண்டது சொந்த ஊருக்கு சென்றது போலவே ஒரு உணர்வினை ஏற்படுத்தியது என்று கூறினர். வீட்டு சாப்பாடு ஒரு வேளையாவது சாப்பிட மாட்டோமா என்று ஏங்கி இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு வயிறார உணவு படைத்த இந்து அறக்கட்டளை வாரியம் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் சங்கத்தின் இப்பணி போற்றத்தக்கதாகும்.

Related posts