சிங்கப்பூரைச் சுற்றி வரும் 150 கிமீ நீளமுள்ள பொழுதுபோக்கிற்கான Round Island பாதையின் கிழக்குப் பகுதி இப்போது திறக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் தேசிய பூங்கா வாரியம் (NParks) நேற்று சனிக்கிழமை (ஜனவரி 22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. செலிட்டரில் உள்ள ரோவர்ஸ் பே பூங்காவில் இருந்து லாப்ரடோர் பூங்காவிற்கு அருகிலுள்ள பெர்லேயர் க்ரீக் வரை நீண்டு இருக்கும், சுமார் 75 கிமீ நீளமுள்ள பசுமை நடைபாதை சுற்று தீவு பாதையின் முதல் கட்டம் இதுவாகும்.
கடந்த 2012ல் முதன்முதலில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது, “Round Island” பாதையானது தீவைச் சுற்றியிருக்கும் மிக நீளமான பொழுதுபோக்கு இணைப்பாக இருக்கும். எதிர்வரும் 2035ம் ஆண்டிற்குள் 360 கிமீ தீவு முழுவதும் எட்டு வெவ்வேறு பாதைகளைக் கொண்ட பொழுதுபோக்கிற்கான வலையமைப்பை உருவாக்குவதற்கான NParksன் ஒட்டுமொத்தத் திட்டங்களின் ஒரு பகுதி தற்போது முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பாதை பாதை ஏற்கனவே உள்ள இயற்கை, கலாச்சார, வரலாற்று மற்றும் பொழுதுபோக்கு தளங்களை இணைக்கும். அத்துடன் சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி மற்றும் ஸ்கேட்டிங் உள்ளிட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளை அதிக அளவில் வழங்கும். பூங்கா இணைப்பான் சனிக்கிழமை திறக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், துணைப் பிரதமரும், பொருளாதாரக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹெங் ஸ்வீ கீட், தேசிய வளர்ச்சி மற்றும் நிதிக்கான இரண்டாவது மந்திரி இந்திராணி ராஜா மற்றும் கிழக்கு கடற்கரை ஜிஆர்சியின் ஆலோசகர் டாக்டர் மாலிகி உஸ்மான் ஆகியோர் புதிய பூங்காவை பார்வையிட்டனர்.
Round Island பாதையின் கிழக்குப் பகுதியில் சுமார் 5,100 மரங்களும் புதர்களும் நடப்பட்டு, பார்வையாளர்களுக்கு நிழலையும் வெப்பத்திலிருந்து ஓய்வு அளிக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் பூர்வீக பல்லுயிர் பெருக்கத்திற்கு உணவு மற்றும் தங்குமிடத்தை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பெனகா லாட் மற்றும் சிறிய-இலைகள் கொண்ட ஜாதிக்காய் போன்ற பூர்வீக கடலோர மற்றும் ஆற்றங்கரை மர இனங்கள் இதில் அடங்கும்.