TamilSaaga

Exclusive: “சிங்கப்பூர் போலீஸ் பேசுறோம்” – வெளிநாட்டு ஊழியர்களை குறிவைக்கும் போலி வாட்ஸ் அப் அழைப்பு

சிங்கப்பூரில் DSB மற்றும் UOB போன்ற பல முன்னணி வங்கிகளை போல SMS அனுப்பி ஏமாற்றும் கும்பல்கள் தொடங்கி இணைய வழியில் மோசடி செய்யும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும் இதுபோன்ற பல மோசடி கும்பல்களை வங்கி அதிகாரிகளின் உதவியோடு போலீசார் கண்டுபிடித்து அவர்களை தண்டித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், சிறந்த முறையில் செயல்பட்டு வரும் சிங்கப்பூர் காவல்துறையினர் பெயரிலேயே தற்போது சில மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சில தொலைபேசி நம்பர்களில் இருந்து வரும் ‘வாட்ஸ்ஆப்’ அழைப்புகளில் தாங்கள் சிங்கப்பூர் காவல்துறையில் இருந்து பேசுவதாகவும், உடனடியாக உங்களுடைய வங்கி கணக்கு குறித்த தகவல்கள், ஏ.டி.எம் கார்டு குறித்த தகவல்கள் மற்றும் பாஸ்போர்ட் குறித்த தகவல்களை அளிக்குமாறும் அந்த அழைப்பில் கேட்கின்றனர்.

சிங்கப்பூரில் உள்ள சில வாட்ஸஅப் குழுக்களில் சாதுர்யமாக நுழையும் இந்த கும்பல் அந்த குழுவில் உள்ளவர்களிடம் வாட்ஸஅப் கால் செய்து, தாங்கள் சிங்கப்பூர் போலீஸ் என்றும் தங்களுடைய வங்கி மற்றும் ஏ.டி.எம் குறித்த தகவல்களை அளிக்குமாறு கேட்கின்றனர். இந்த கும்பலின் உண்மை நோக்கம் என்னவென்பது இதுவரை பலருக்கு புலப்படாமல் உள்ளது.

இருப்பினும் இதுபோன்று காவலர்கள் பெயரில் மோசடி செய்யும் கும்பலை சிங்கப்பூர் போலீஸ் விரைந்து கண்டுபிடிப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.மக்களும் இதுபோன்ற போலி ஆசாமிகளிடம் சிக்கிக்கொள்ளாமல் விழிப்போடு செயல்பட வேண்டும். மேலும் மக்கள் தங்களுக்கு இதுபோன்ற மிரட்டல் அழைப்புகள் வரும் நிலையில் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் தயங்காமல் புகார் அளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts