சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 30) நண்பகல் நிலவரப்படி 3,112 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் 14 பேர் வைரஸால் ஏற்பட்ட சிக்கல்களால் இறந்துள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது. 63 மற்றும் 98 வயதிற்குட்பட்ட அவர்கள், பல்வேறு அடிப்படை மருத்துவ நிலைமைகளைக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களிடம் கண்டறியப்பட்ட மருத்துவ நிலைமைகள் என்ன என்பதை சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிடவில்லை. இதன் மூலம் சிங்கப்பூரில் பெருந்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 394 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று சனிக்கிழமை பதிவான வழக்குகளில், 3,108 நோய்த்தொற்றுகள் உள்நாட்டில் பரவியுள்ளது, இதில் சமூகத்தில் 2,608 மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தங்குமிடங்களில் 500 வழக்குகள் உள்ளன. மேலும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த நான்கு பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்றும், MOH அதன் தினசரி ஊடக வெளியீட்டில் நேற்று இரவு 11.30 மணியளவில் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதம் சனிக்கிழமை நிலவரப்படி 1.14 ஆக உள்ளது. இது கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் சமூக வழக்குகளின் விகிதத்தைக் குறிக்கிறது. சனிக்கிழமை நிலவரப்படி, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சிங்கப்பூரில் மொத்தம் 1,95,211 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது சிங்கப்பூரில் மொத்தம் 1,627 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 267 நோயாளிகளுக்கு பொது வார்டுகளில் ஆக்ஸிஜன் வசதி தேவைப்படுகிறது. ICU-ல், 69 வழக்குகள் நெருக்கமான கண்காணிப்பில் உள்ளனர். மேலும் 60 பேர் மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்டு ICU பிரிவில் உள்ளனர். தற்போதைய ஒட்டுமொத்த ICU பயன்பாட்டு விகிதம் 68.1 சதவீதமாக உள்ளது.