Chennai Singapore Flight: வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்கு திரும்பியது.
159 பயணிகள் மற்றும் 8 குழு உறுப்பினர்கள் என மொத்தம் 167 பேருடன் சென்ற இந்த விமானம், முதலில் அதிகாலை 12.45 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக விமானம் புறப்படுவது தாமதமாகி, அதிகாலை 2.30 மணிக்கு தான் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
விமானம் ஏற்கனவே சிங்கப்பூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, விமானியும் குழுவினரும் தொழில்நுட்பக் கோளாறை கண்டறிந்து, உடனடியாக சென்னை விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு பாதுகாப்பாக விமானத்தை திரும்பப் பெற்றனர்.
விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்: “பயணிகளின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதும், விமானி உடனடியாக நடவடிக்கை எடுத்து விமானத்தை பாதுகாப்பாக திரும்பப் பெற்றார். அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருக்கின்றனர்.”
இதற்கிடையே, வெள்ளிக்கிழமை காலை டெல்லி விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்ட அடர்ந்த மூடுபனி காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். IndiGo விமான நிறுவனம் அதிகாலை 5:04 மணிக்கு தனது எக்ஸ் பக்கத்தில், பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன் தங்கள் விமான நிலையை சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி விமான நிலைய இயக்குநர் DIAL வெளியிட்ட அறிக்கையின்படி, அதிகாலை 5:52 மணி நிலவரப்படி அடர்ந்த மூடுபனி காரணமாக விமானங்கள் புறப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், CAT III இணக்கமான விமானங்கள் தரையிறங்கவும் புறப்படவும் முடிந்தது.
விமான கண்காணிப்பு இணையதளமான Flightradar.com வெளியிட்டுள்ள தகவலின்படி, டெல்லி விமான நிலையத்தில் 180க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளது.