51 மாடிக் கட்டிடத்தோட உச்சியில தோட்டம் இருந்து பார்த்திருக்கீங்களா… அவ்வளவு உயரத்துல அமைக்கப்பட்டிருக்கும் தோட்டத்தை நேர்ல பாக்குற வாய்ப்பு கிடைச்சா என்ன பண்ணுவீங்க…
சிங்கப்பூரின் சென்ட்ரல் பிசினஸ் டிஸ்ட்ரிக்ட் பகுதியில் அமைந்திருக்கும் 51 மாடிகளைக் கொண்ட CapitaSpring கட்டிடத்தில்தான் அந்தத் தோட்டம் அமைஞ்சிருக்கு… அவ்வளவு உயரமான கட்டடத்தோட மொட்டை மாடியில் ஒரு பெரிய தோட்டத்தையே பராமரிக்குறாங்களாம்.. அதை நீங்க நேர்லயும் பாக்குறதுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்காங்க.. இதுதவிர, ஷாப்பிங்குக்கான கடைகள், சர்வீஸ் அபார்ட்மெண்ட்னு பிரமாண்டமா அமைஞ்சிருக்க அந்த கட்டிடத்தோட ஸ்பெஷல்கள் என்னென்னனு பார்க்கலாமா?
CapitaSpring building
சென்ட்ரல் பிசினஸ் டிஸ்ட்ரிக்ட்-இன் மார்க்கெட் ஸ்ட்ரீட் தெருவில் அமைந்திருக்கிறது CapitaSpring கட்டிடம். 51 மாடிகளைக் கொண்டிருக்கும் இதன் மொத்த உயரம் 280 மீட்டர். hawker centre, அலுவலகங்கள், நீச்சல் குளத்துடன் கூடிய சர்வீஸ் அபார்ட்மெண்ட்கள், இரண்டு தோட்டங்கள் மற்றும் பார்வையாளர், அப்ஷர்வேஷன் டெக் என பலவகையான வசதிகளைக் கொண்டிருக்கிறது. கடந்த 2021-ல் கட்டிமுடிக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தின் மொத்த பரப்பளவில் அலுவலகங்கள் உள்ளிட்ட 6,73,000 சதுர அடி பரப்பளவுக்கு ஆட்கள் குடிபெயர்ந்திருக்கிறார்கள். வாடகைக்குக் குடியிருப்பவர்கள், கடந்த நவம்பர் முதல் இங்கு குடிவரவும் தொடங்கியிருக்கிறார்கள்.
hawker centre
சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஹாங்காங் சுற்றுவட்டாரங்களில் மட்டுமே இருக்கும் hawker centre-கள் ஹோட்டல்களைப் போன்ற அம்சங்களையே கொண்டிருக்கும். ஆனால், நீங்கள் உணவு அருந்தும் இடம் என்பது மிகப்பெரிய வெட்ட வெளியாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு கிரவுண்டில் அமர்ந்து கூட்டமாக குடும்பத்தினர், நண்பர்களோடு உணவு சாப்பிடும் அனுபவத்தைக் கொடுக்கும். இந்தக் கட்டிடத்தில் 3 மாடிகளைக் கொண்ட hawker centre அமைந்திருக்கிறது. மார்க்கெட் ஸ்ட்ரீட்டில் இயங்கிவந்த hawker centre, இங்கு இடம்பெயர இருக்கிறது. 56 கடைகளுடன் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த ஹாக்கர் சென்டர் வரும் ஏப்ரலில் இருந்து செயல்படத் தொடங்கும்.
சர்வீஸ் அபார்மெண்ட்
அலுவலகங்கள் மற்றும் கடைகள் மட்டுமல்லாது சர்வீஸ் அபார்மெண்டுகளையும் உள்ளடக்கியது இந்த வடிவமைப்பு. சிங்கப்பூரில் சர்வீஸ் அபார்மெண்ட் சேவையில் முன்னணியில் இருக்கும் Citadines Raffles Place Singapore நிறுவனம் இங்கு, எக்ஸ்குளூசிவ்வாகத் தனது Citadines Apart’hotel-ஐத் திறந்திருக்கிறது. எட்டு மாடிகளை உள்ளடக்கிய அந்த ஹோட்டலில் 1 BHK, 2 BHK வீடுகள் இருக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு ஹோட்டலைப் போன்ற வசதிகளை அளிக்கும் சர்வீஸ் அபார்மெண்டுகள் சொகுசைக் கொடுக்கும் என்கிறது அந்த நிறுவனம். 299 அபார்ட்மெண்டுகளை உள்ளடக்கிய அந்த சர்வீஸ் அபார்ட்மெண்ட்டில் ஸ்டூடியோ, ஜிம், 25 மீ நீளம் கொண்ட நீச்சல் குளம், 400 மீட்டரில் ஓடுதளம் என பல்வேறு வசதிகள் இருக்கின்றன.
பசுமையான பகுதி
CapitaSpring கட்டிடத்தின் பெரும்பகுதி இயற்கை சூழலோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரத்யேக டிசைனுக்காகவே சிங்கப்பூரின் Building and Construction Authority (BCA) அமைப்பின் உயரிய விருதான Green Mark Platinum Award-ஐப் பெற்றிருக்கிறது. இது, சிங்கப்பூர் கட்டிடக் கலைத் துறையின் முக்கியமான விருதாகப் பார்க்கப்படுகிறது. இதே விருதைப் பெற்ற மற்றொரு கட்டிடம் PARKROYAL ஆகும். இந்தக் கட்டிடத்தில் மட்டுமே 130 வகைகளைச் சேர்ந்த 80,000-த்துக்கும் மேற்பட்ட செடிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் 63% சிங்கப்பூரில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது. இந்தக் காரணத்தால், ரசாயன உரங்கள் தேவையில்லை. அதேபோல், குறைவான தண்ணீர் மட்டுமே பராமரிப்புக்காகப் பயன்படுத்தினால் போதும். இந்தக் கட்டடம் biophilic skyscraper அந்தஸ்து பெற்றது.
அது என்ன biophilic skyscraper என்கிறீர்களா?… ஒரு கட்டிடம் வடிவமைக்கப்படும்போது, இயற்கையோடு இணைந்த வாழிட சூழலோடு வடிவமைக்கப்பட வேண்டும். அங்கு வசிக்கும் மக்களுக்கு இயற்கையான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இயற்கையான வெளிச்சம், காற்றோட்ட வசதி போன்ற பல்வேறு அம்சங்களோடு கட்டப்படும் கட்டிடங்களுக்கு biophilic skyscraper அந்தஸ்து கொடுக்கப்படும்.
தாவரவியல் பூங்கா
தரையில் இருந்து 100 மீ உயரத்தில் Green Oasis பகுதி அமைந்திருக்கிறது. கட்டிடத்தில் 17-20 மாடிகளில், சுமார் 35 மீ உயரத்துக்கு முழுவதுமாகத் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் மட்டுமே 70 வகைகளைச் சேர்ந்த 30,000-த்துக்கும் மேற்பட்ட தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. பொதுமக்களும், கட்டிடத்தில் வசிப்பவர்களும் இந்தத் தாவரங்கள் ஊடே நடந்து சென்று இயற்கையை ரசிப்பதோடு, கட்டிடத்தின் உயரமான வியூவையும் ரசிக்க முடியும். ரெஸ்டாரெண்ட், நடைபாதை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ரூஃப் டாப் தோட்டம் மற்றும் அப்ஷர்வேஷன் டெக்
இந்தக் கட்டிடத்தின் முக்கியமான அம்சமே 51 மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருக்கும் தோட்டமும் அப்ஷர்வேஷன் டெக்கும்தான். அங்கிருந்து மொத்த சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட் பகுதியையும் மெரினா பே-வயும் வேறொரு ஆங்கிளில் நீங்கள் பார்க்க முடியும். இதுதான் சிங்கப்பூரில் மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ள மிக உயரமான அப்ஷர்வேஷன் டெக்.
அதேபோல், 51-வது மாடியில் 5,000 சதுர அடி பரப்பளவில் 5 தீம்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட தோட்டம் உங்களை வரவேற்கிறது. அவ்வளவு உயரத்தில் தோட்டம் ஒன்றில் இருப்பது நிச்சயம் உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்றே சொல்லலாம். முள்ளங்கி, மஞ்சள், okra மற்றும் பல்வேறு வகையான கீரை வகைகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. இங்கு வளர்க்கப்படும் காய்கறிகள் ரூஃப் டாப்பிலேயே உங்களால் சுவைக்க முடியும். அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. 2022-ம் ஆண்டின் பிற்பகுதியில் மக்கள் பார்வைக்காக இது திறக்கப்பட இருக்கிறது.
சைக்கிளிங்
இங்கு நீங்கள் சைக்கிளிங் எக்ஸ்பீரியன்ஸையும் பெற முடியும். இதற்காகவே எக்ஸ்குளூசிவ்வாக 600 மீ சைக்கிளிங் பாதையும் அமைக்கப்பட்டிருக்கிறது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் Green Plan 2030 சிங்கப்பூரின் கொள்கை முடிவுக்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் போர்ட்டல்களுக்கும் இங்கே இருக்கின்றன.
இப்படி இயற்கையோடு நவீன வசதிகளையும் கொண்ட CapitaSpring கட்டிடத்துக்கு வாய்ப்புக் கிடைச்சா நிச்சயம் ஒரு விசிட் அடிங்க மக்களே.. வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸா அது உங்களுக்கு இருக்கும்.