சிங்கப்பூரின் பூன் லே டிரைவில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற திருமணச் சடங்கில் பயங்கரமான ஆயுதங்களுடன் சென்று இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் இருவர் மீது இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 9) காலை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரர் முஹம்மது சாஜித் சலீம் (20) மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர் என்று கருதப்படும் நிஸ்வான் திருச்செல்வம் (19) ஆகிய இருவரும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
கடந்த புதன்கிழமையன்று 175 பூன் லே டிரைவில் உள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் திரு பிரவீன் ராஜ் சந்திரன் என்பவரைத் தாக்க கத்திகளைப் பயன்படுத்தி அவருக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்ற ஆவணங்கள் திரு பிரவீனின் வயதைக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஜித்தும் நிஸ்வானும் வெள்ளை உடையில் அங்கு அழைத்துவரப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் தடியடி ஆகியவை விதிக்கப்படலாம்.
தற்போது விசாரணைக்காக போலீசாரால் வெளியில் செல்லப்பட அனுமதிக்கப்பட்டுள்ள இந்த இருவரும் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் வரும் ஏப்ரல் 14ம் தேதி அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை மாலை 5 மணியளவில், இந்த தாக்குதல் குறித்த உதவி கோரி காவல்துறைக்கு பல அழைப்புகள் வந்துள்ளன. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த இருவரும் ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இருவரையும் தேடும் வேட்டை நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவர, அவர்கள் இருவரும் கடந்த வியாழன் அன்று உட்லண்ட்ஸில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர். உடனடியாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த புதன்கிழமை, மணமகள் யுரோஷினி ஜோசபின் என்பவருக்கும் மணமகன் இம்மானுவேல் ரவி என்பவருக்கும் திருமண சடங்குகள் நடந்துகொண்டிருந்த வேளையில், திருமணத்தில் கலந்து கொண்ட இம்மானுவேலின் நண்பர்கள் தாக்கப்பட்டதாக அவருக்கு அழைப்பு வந்தது.
திரு. இம்மானுவேல் வெள்ளிக்கிழமை தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் பேசும்போது, பாதிக்கப்பட்டவர்கள் தனது குடும்பத்தின் நெருங்கிய நண்பர்கள் என்று கூறினார், மேலும் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரைத் தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.
தற்போது மருத்துவமனையில் தலை மற்றும் கைகால்களில் 12 வெட்டுக் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றார் திரு. பிரவீன். மேலும் இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட திரு. சரண் குமாரின் தலையில் 8 செ.மீ அளவிற்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.