SINGAPORE: சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்துத் துறை இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 3,500 முதல் 4,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்
கொரோனா பெருந்தொற்று காரணமாக விமான போக்குவரத்து பரவலாக உலகம் முழுவதும் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. 2022 மார்ச் மாதத்துக்கு பிறகே மெல்ல மெல்ல போக்குவரத்து சீரடைந்து வருகிறது.
குறிப்பாக நமது சிங்கப்பூரிலும் பெரிய அளவில் விமான போக்குவரத்து பாதிப்படைந்தது. இந்நிலையில், அமைச்சர் ஈஸ்வரன் பேசுகையில், “தற்போது 64 சதவிகித விமானங்கள் சிங்கப்பூரில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கையை, நாம் 2019ல் இருந்தது போல் 80 சதவிகிதத்துக்கு உயர்த்த வேண்டும். சிங்கப்பூரின் எல்லைகள் 5 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட பிறகு, பயணிகளின் எண்ணிக்கை தற்போது சராசரியாக 58 சதவிகிதத்தில் உள்ளது. இதையும் நாம் அதிகப்படுத்த வேண்டும்.
அதேசமயம், போக்குவரத்தின் அதிகரிப்புக்கு ஏற்ப ஊழியர்களின் தேவையும் அவசியமாகிறது. விமான துறையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மொத்தம் உள்ள 35,000 ஊழியர்களில் 10,000 ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், ஏற்கனவே 4,000 பேருக்கு மேல் விமான துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில், இன்னும் 4,000 பேரை பணியமர்த்தினால், ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 33,000-ஆக உயர்ந்துவிடும்.
“ஆனால், இவ்வளவு பேரை வேலைக்கு எடுப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. இது பணி சீராக மேற்கொள்ளப்படும். வேலைக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்கள், விமான செயல்பாட்டுத் தேவைகளுக்குத் தயாராகும் வகையில் பயிற்சி பெற்றவர்கள் என்பதையும் நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஸோ, வரும் அக்டோபர் மாதத்துக்குள், அமைச்சர் சொன்னபடி 4000 ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சிங்கப்பூரர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊழியர்களும் தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.