சிங்கப்பூரில் குளிர்பதன பெட்டிகளை பழுதுபார்க்க சென்ற இந்திய நபர் ஒருவர் அவ்விடத்தில் புகை பிடித்து விட்டு அதை அனைத்துவிட்டதாக எண்ணி அருகில் இருந்த குப்பையில் தூக்கி எறிந்ததால் அதன் மூலம் தீ மூண்டு சுமார் 5 ஆயிரத்து 300 டாலர் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.
தனது குற்றத்தை தற்போது ஒப்புக்கொண்டுள்ள அந்த நபருக்கு 10 நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி இரவு 11.30 மணி அளவில் அங் மோ கியோவில் உள்ள காவல்துறையின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
குளிர்சாதனப் பெட்டி பழுதுபார்க்க சென்ற இந்திய நாட்டவரான 30 வயது மதிக்கத்தக்க கணேசன் புகை பிடித்து விட்டு அதை அணைத்து விட்டதாக எண்ணி அருகிலிருந்த குப்பையின் மீது எறிந்துள்ளார். புகை மண்டலம் கிளம்பியதை அடுத்து குடிமை தற்காப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விரைந்து வந்த குடிமை தற்காப்பு படையினார் தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன் மூலம் சுமார் 5300 வெள்ளி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது கணேசனுக்கு 10 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.