TamilSaaga

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் “போனஸ்” – 76 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய லாபம்.. திரும்பிப் பார்க்க வைத்த அறிவிப்பு!

சிங்கப்பூரில் தான் வேலைப்பார்க்கும் கம்பனிக்காக எல்லா இன்னல்களையும் பொறுத்துக் கொண்டு, சம்பள குறைப்பை பொறுத்துக் கொண்டு, ஆட்குறைப்புகளையும் பொறுத்துக் கொண்டு தொடர்ந்து தனது கடின உழைப்பை வழங்கிய இளம் ஊழியர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெகுமதி இது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த ஆண்டு இதுவரை இல்லாத ஒரு மிகப்பெரிய லாபத்தை அடைந்துள்ளது. ஆம்! அந்த நிறுவனம் தனது 76 ஆண்டுகால வரலாற்றில் பதிவு செய்த அதிகபட்ச லாபம் இது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

அப்படியென்ன லாபம்?

இதுகுறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 1.6 பில்லியன் டாலர் வருமானமாக வந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமெனில் “ரூ.13,000 கோடி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்நிறுவனத்தில் கடுமையாக உழைத்த ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 8 மாத சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, சிங்கை ஏர்லைன்ஸ் கீழ் இயங்கும் Scoot நிறுவனத்தின் லாபமும் சேர்த்து இந்த வருமானம் கணக்கிடப்பட்டுள்ளது.

முந்தைய நிதியாண்டில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் லாபத்தை அதிகப்படுத்தும் வகையில் பணியாற்றிய தகுதியான ஊழியர்கள் 8 மாத சம்பளத்திற்குச் சமமான போனஸைப் பெறுவார்கள். இருப்பினும், இந்த கூடுதல் போனஸ் மூத்த நிர்வாகிகளுக்கு வழங்கப்படாது. நோய்த் தொற்று காலத்தில் ஊதியம் குறைக்கப்பட்ட போதிலும், அர்ப்பணிப்புடனும் கடினமாக உழைத்த ஊழியர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த 8 மாத போனஸ் அமையும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் Business Insider இடம் கூறினார்.

இதில் குறிப்பிடத்தக்க தகவல் என்னவெனில், கடந்த 2020 – 2022 நிதியாண்டில் 2.75 பில்லியன் டாலர் வருமான இழப்பை சந்தித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், இம்முறை மீண்டெழுந்து, இதுவரை அதன் சரித்திரத்திலேயே இல்லாத லாபத்தை அடைந்துள்ளது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts