வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் (MTI) அமைச்சர் லோ யென் லிங், கடந்த மார்ச் 4, வெள்ளியன்று பாராளுமன்றத்தில் பேசியபோது S$70 மில்லியன் மதிப்பிலான, உணவு சேவைகள் மற்றும் சில்லறை வணிகங்களுக்கான மறுமலர்ச்சி திட்டத்தை அறிவித்தார். சிங்கப்பூரை பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட அந்த இரண்டு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று லோ குறிப்பிட்டார்.
உணவு மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளில் உள்ள வணிகங்கள் தங்களை (Upgrade) உருமாற்றிக்கொள்ளவும், எதிர்வரும் சவால்களை சமாளிக்கவும், அரசாங்கம் S$70 மில்லியன் புத்துயிர் பொதியை (Revitalisation package) அறிமுகப்படுத்தும் என்றார் அவர். இந்த தொகுப்பு, இரு துறைகளிலும் உள்ள வணிகங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு “முக்கியமான ஆதரவை” நீட்டிக்கும் என்றும், மேலும் அந்த நிறுவனங்கள் உலகளாவிய அளவில் போட்டித்திறனுடன் இருக்க “அவர்களுக்கான மாற்றத்தை” செயல்படுத்த உதவும் என்று லோ பகிர்ந்துள்ளார்.
கூடுதலாக, இந்த S$70 மில்லியன் திட்டம் உணவு சேவைகள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் உள்ளூர் மக்களை பணியமர்த்துதல் மற்றும் பயிற்சி அளிப்பதன் மூலம் “தங்கள் மனிதவளத்தை அதிகரிக்க” இது அனுமதிக்கும். “S$70 மில்லியன் திட்டத்தின்” கீழ் இந்த நீட்டிப்பு F&B மற்றும் சில்லறை வணிகங்களுக்கு எதிர்காலத்தில் அவர்களை சிறப்பாக நிலைநிறுத்த உதவும் என்று நம்புவதாக லோ குறிப்பிட்டார். “எனவே, உணவு சேவைகள் மற்றும் சில்லறை வணிகத் துறைகளுக்கு 80 சதவீத ஆதரவு EDG (Enterprise Development Grand) மற்றும் PSG (Productivity Solution Grand) கீழ் தொடர்புடைய தீர்வுகளை 31 மார்ச் 2023 வரை நீட்டிப்போம்” என்றார் அவர்.
EDG ஐப் பயன்படுத்தி தனது வணிகத்தை வெற்றிகரமாக மாற்றியமைத்த ஒரு F&B நிறுவனத்தை உதாரணமாகவும் லோ கூறினார். Dian Xiao Er என்ற அந்த நிறுவனம் சிங்கப்பூரில் 15 விற்பனை நிலையங்களைக் கொண்ட ஒரு சீன உணவகம் ஆகும். இது Herbal Roast Duck உணவுகளுக்குப் புகழ் பெற்றது. கடந்த 2020ம் ஆண்டு முதல், Dian Xiao Er அவர்களின் சமையலறையை மேம்படுத்த, மூன்று திட்டங்களுக்கு EDGஐத் பயன்படுத்தியதாக லோ பகிர்ந்துள்ளார்.
ஆகவே இந்த புதிய S$70 மில்லியன் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தவும், “போட்டியுடன் இருக்கவும், எதிர்காலத்தில் தலைதூக்கும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கவும்,” உணவுச் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களை அவர் ஊக்குவித்தார். மேலும் Dian Xiao Er நிறுவனத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அவர்களை பின்பற்றுமாறு அவர் கூறினார்.