கொரோனா போன்ற கொடுமைகளையே நாம் சமாளிக்க பழகிவிட்டதால், டெங்கு, மலேரியா போன்ற நோய்களை நாம் ‘அப்படி ஓரமா போ’ எனும் மோடில் டீல் செய்யலாம். ஆனால், இந்த வகை நோய்கள் ‘ஆல்டைம் அயிட்டக்கார’ வகையைச் சேர்ந்தவை என்பதே உண்மை.
வருடா வருடம் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் தவறாமல் வருவது போல், டெங்கு, மலேரியாவும் வந்துவிடும்.
1779ம் ஆண்டு தான் முதன் முதலாக டெங்கு நோய் பரவியதாக வரலாறு சொல்கிறது. அதற்கு முன்பு கூட இருந்திருக்கலாம். ஆனால், அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட காலம் அது தான். குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்கு பிறகு தான் ஒவ்வொரு வருடமும் தவறாமல் வந்து செல்லும் அழையா விருந்தாளியாக டெங்கு உருமாறியது.
முக்கியமாக தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் தென் அமெரிக்காவில் ஆண்டுக்கு சுமார் 390 மில்லியன் மக்கள் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். இதில், சுமார் அரை மில்லியன் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய சூழலும் நிலவுகிறது.
இன்னும் சொல்லப்போனால், மாலை 6 மணி ஆகிவிட்டதென்றால் ஜன்னல், கதவுகளை எல்லாம் மூடும் பழக்கத்தை நமக்கு அறிமுகம் செய்ததே இந்த டெங்கு சார் தான்.
இப்படிப்பட்ட ஆபத்து வாய்ந்த டெங்கு, மலேரியா இப்போது சிங்கப்பூரில் அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, சிங்கப்பூரில் இந்த ஆண்டு இதுவரை சுமார் 1, 400 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, வரும் மாதங்களில் இன்னும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், ‘வரும் முன் காப்போம்’ என்ற மெகா ஆயுதத்தை சிங்கப்பூர் அரசு கையில் எடுத்துள்ளது.
ஆம்! ‘Wolbachia-Aedes Mosquito Suppression Strategy’ எனும் திட்டத்தின் கீழ் டெங்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் கொசுக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் நடவடிக்கையை சிங்கப்பூர் அரசு தொடங்கியுள்ளது. அதென்ன Wolbachia-Aedes Mosquito Suppression Strategy?
இந்த யுக்தி மூலம், மலட்டுத்தன்மை கொண்ட கொசுக்களை உருவாக்க முடியும். அதாவது, Wolbachia பாக்டீரியாவை கொசுக்களில் செலுத்தி மலட்டுத்தன்மை கொண்ட கொசுக்கள் உருவாக்கப்படும். இந்த கொசுக்கள் நோய்களை பரப்பும் கொசுக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் போது, அவை இடும் முட்டைகள் பொரியாது. இதன் மூலம் டெங்குவை பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கை குறையும். ஒருகட்டத்தில் முற்றிலும் அது ஒழியும்.
இதுபற்றி சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறுகையில், “தொடக்கத்தில் ஒவ்வொரு வாரமும் 20 லட்சம் மலட்டு கொசுக்கள் (ஏடிஸ் கொசுக்கள்) உற்பத்தி செய்யப்படும். அதன்பின்னர், வாரத்திற்கு 50 லட்சம் ஏடிஸ் கொசுக்கள் என இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். டெங்குவை கட்டுப்படுத்தும் முயற்சியாக, இயற்கையாக உருவாகிய கொசுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இவை செயற்கையாக ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.