TamilSaaga

சிங்கப்பூர் மக்களின் கண்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கும் ‘கம்போங் கிளாம்’… ஐந்தாண்டு அசத்தல் திட்டத்தினை அறிவித்தது சிங்கப்பூர் அரசு!!

சிங்கப்பூரில் கிராம வாசனை சிறிதளவு ஒட்டிக் கொண்டிருக்கும் கம்போங் கிளாம் வட்டாரத்தை, மேலும் கலை நயம் மிக்கதாக ஆக்கி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை ஈர்க்கும் நோக்கத்துடன் 5 ஆண்டு திட்டத்தினை செயல்படுத்த சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி வரவிருக்கும் 5 ஆண்டுகளில் கம்போங் வட்டாரத்தில் சிங்கப்பூரின் வரலாறை எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு விதமான கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் பசுமையை நிலைநாட்டும் வகையில் நடைபாதைகள் உள்ளிட்ட பல இடங்களிலும் அலங்காரங்கள் செய்யப்படும்.

இதன் ஒரு பகுதியாக சுல்தான் கேட் பகுதியில் உள்ள திறந்தவெளி மையத்தில் விரைவில் திருமணங்கள், மேடை நிகழ்ச்சிகள் மற்றும் சந்தைகள் போன்ற பொது நிகழ்ச்சிகளை நிகழ்த்த அரசு திட்டமிட்டு இருக்கின்றது. மேலும், இதன் சுற்றுப்புறங்களில் கம்போங் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் ஓவியங்கள் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து இடங்களிலும் வரையப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக கம்போங் வாழ்க்கை முறையினை சித்தரிக்கும் சுவரொவியம் மூன்று மாடி உயரமுள்ள சுவற்றில் அடுத்த மாதம் முதல் இடம் பெற உள்ளது. மக்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அட்டகாசமாக இந்த ஓவியத்தினை காட்சிப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டின் கலாச்சாரத்தை நிலைநாட்டும் பொருட்டு, இந்த திட்டங்களானது கம்போங் கிளாம் வட்டார குடியிருப்பாளர்கள் சங்கமூலம் நேற்று (ஜூலை -10) விவாதிக்கப்பட்டு இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டன. இன்றைய தலைமுறைகள் உள்ளவர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் கம்போங் கிராமத்தைப் பற்றிய தகவலை ஏறிய இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் தொழில்நுட்பத்துடன், பாரம்பரியத்தையும் இக்கால சந்ததியினருக்கு புகட்டுவதற்கு இந்த சுற்று வட்டாரம் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சிங்கப்பூர் நாட்டில் வாழும் தமிழர்களும் இனி கம்போங் பகுதிக்கு சென்றால் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஓவியங்களை கண்டு மகிழலாம்.

Related posts