கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட “பகிர்வு ஏற்பாட்டின்” ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய அரசு நேற்று வியாழன் (நவம்பர் 18) ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட்-19 தடுப்பூசியின் சுமார் 5,00,000 டோஸ்களை சிங்கப்பூருக்குத் அனுப்பியுள்ளது. போடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியாவின் தடுப்பூசி வெளியீட்டை விரைவுபடுத்த உதவுவதற்காக சிங்கப்பூர் சுமார் 5,00,000 டோஸ் mRNA தடுப்பூசியை கடந்த செப்டம்பர் 2 அன்று ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியது என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் ஏற்றுமதி அக்டோபரில் 17.9% உயர்வு
“ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய டோஸ்கள், நமது மக்கள் தொகையில் தகுதியான பிரிவினருக்கு பெருந்தொற்று பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதற்கான சிங்கப்பூரின் தற்போதைய திட்டத்தை ஆதரிக்கும்” என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த டோஸ் பகிர்வு ஏற்பாடு சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான வலுவான உறவுகளுக்கு சான்றாகும், இது எங்கள் விரிவான மூலோபாய கூட்டாண்மை மூலம் ஆதரிக்கப்படுகிறது.” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஏற்பாட்டை செயல்படுத்த இரு நாடுகளின் சுகாதார மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் “நெருக்கமாக” பணியாற்றியதாக MFA கூறியது. “தொற்றுநோய் காலம் முழுவதும், இரு நாடுகளும் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டன.
இருநாட்டு சந்தைகளைத் திறந்து வைத்திருக்கவும், விநியோகச் சங்கிலி இணைப்பை உறுதிப்படுத்தவும் ஒத்துழைத்தன. “மேலும் இருவழித் தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்தைத் தொடர ஒன்றாகச் செயல்பட்டன” என்று MFA மேலும் கூறியது. ஆகஸ்ட் 31 அன்று ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபோது, சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அதே அளவு தடுப்பூசிகள் டிசம்பரில் திருப்பித் தரப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.