Singapore Education Tour: தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் மாணவர்களின் திறமைகளை உலகளாவிய அளவில் வெளிப்படுத்தும் வகையில், மன்றப் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளனர். 42 மாணவர்கள், அவர்களுக்கு வழிகாட்டியாக 3 கல்வி அலுவலர்கள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோர் சிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலா சென்றுள்ளனர். இச்சுற்றுலாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையேற்று சென்றுள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்: “கல்விச்சுற்றுலாவாக இரண்டு நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் வந்தோம். இங்கு தேசிய நூலகங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அறிவுசார் மையங்களை மாணவர்களுடன் இணைந்து பார்வையிட்டோம். இதற்கு மேலாக, சிங்கப்பூரின் புகழ்பெற்ற Gardens by the Bay நகர்ப்புற பூங்காவையும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்”.
இயற்கையின் அவசியத்தை உணர்த்தும் இந்தப் பூங்கா 260 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1.5 மில்லியனுக்கும் அதிகமான தாவரங்களைக் கொண்டுள்ள இப்பூங்காவினை இதுவரை 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்வையிட்டு உள்ளார்கள்.
சிங்கப்பூர் நாட்டின் நீடித்த நிலைத்தன்மைக்காக மேற்கொள்ளப்பட்டவரும் முயற்சிகள் குறித்தான பல்வேறு தகவல்களை அளிக்கும் Marina Barrage பகுதிக்கு அரசு பள்ளி மாணவர்கள் சென்றனர்.
இது குறித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,“Marina Barrage பார்வையின் போது சிங்கப்பூர் நாட்டின் கட்டமைப்பில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்தும், வருங்காலத்தின் செயல்பாடுகள் குறித்து கல்விசார் பயிற்றுநர்கள், மாணவர்களுக்கு விளக்கங்களை வழங்கினார்கள்” என தெரிவித்துள்ளார்.
சுற்றுலாவிற்கான அனைத்துச் செலவுகளையும் தமிழக அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வி பெறும் ஏழை எளிய மாணவர்களுக்கு, இதுபோன்ற வெளிநாட்டு கல்விச்சுற்றுலா நிகழ்ச்சிகள் முக்கிய அனுபவ வாய்ப்புகளை அளிக்கின்றன. பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் ஆர். சுவாமிநாதன் இதுகுறித்து கூறியதாவது: “இத்தகைய நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் மக்களின் வாழ்கைமுறைகள், கல்விமுறைகள், கட்டடக்கலை போன்ற பல்வேறு தகவல்களை நேரடியாக அனுபவித்து அறிய ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகின்றன.”
இந்த முயற்சிகள் மாணவர்களின் ஞானத்தை விரிவுபடுத்தி, அவர்களது எதிர்கால வளர்ச்சிக்கு நல்ல தளமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
கரையோரப் பூந்தோட்டம், சிங்கப்பூர்ப் பூமலை, பொங்கோல் வட்டார நூலகம், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், செந்தோசாத் தீவு உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த மாணவர்கள் வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 27) இந்திய மரபுடைமை நிலையத்தையும் பார்வையிட்டனர்.
இந்தச் சுற்றுலா மாணவர்களுக்கு கல்வி மற்றும் கலாச்சார அனுபவங்களை பகிர்ந்துகொள்ள சிறந்த வாய்ப்பாக அமைந்தது.