சிங்கப்பூர்-டோ பயோவில் 52 வயது பெண்ணை கழிவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 28 வயது இளைஞர் மீது கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) குற்றம் சாட்டப்பட்டது. தற்போது செவ் கீ ஹாக் என்ற அந்த நபர் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. கடந்த வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 9.05 மணிக்குள் தோயா பயோவில் உள்ள ஒரு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள கழிவறையில் இந்த சம்பவம் நடந்தது.
போலீசார் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் டோ பயோவில் உள்ள ஒரு கட்டிடத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபரால் 52 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அந்த இடத்திற்கு போலீசார் விரைந்ததாகவும். சம்பவ இடத்திற்கு போலீசார் வரும்போது அந்த நபர் தப்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சம்பவத்தின் போது அந்த பெண் லேசான காயமடைந்தார் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சுமார் 10 மணி நேரம் கழித்து, அந்த நபர் ஆங் மோ கியோவில் உள்ள ஒரு குடியிருப்பு பிரிவில் போலீஸ் கேமராக்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டார். டாங்ளின் காவல் பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் காவல் செயல்பாட்டு கட்டளை மையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் இந்த வழக்கில் இணைந்து பணியாற்றினர்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 375 (3) (a) (i) ன் கீழ் தண்டிக்கப்படக்கூடிய 375 (1A) (a) பிரிவின் கீழ் கடுமையான பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிமன்றத்தில் அந்த நபர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மோசமான பாலியல் பலாத்கார குற்றத்திற்கு எட்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும், மேலும் 12 பிரம்படிகளுக்கு குறையாமல் வழங்கப்படும்.