TamilSaaga

அட்சய திரிதியையன்று தங்கம் வாங்குவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? புராணங்கள் கூறும் கதை என்ன?

அட்சய திரிதியை என்பது இந்துக்களுக்கு மட்டுமின்றி ஜயின மதத்தவர்களுக்கும் மிக முக்கியமான புனிதமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் மிகவும் ஆற்றல் மிகுந்த, முக்கியமான, மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. அட்சய என்ற சமஸ்கிருத சொல்லுக்கு குறைவின்றி பெருகுதல் என்று பொருள். மாதந்தோறும் திரிதியை திதி வந்தாலும் சித்திரை மாத வளர்பிறையின் மூன்றாம் நாளில் வருவதை அட்சய திரிதியை நாளாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு அட்சய திரிதியை நாள் மே 10ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

அட்சய திரிதியை சிறப்புகள் :

அட்சய திரிதி அன்று புதிய தொழில், வேலை துவங்குவதல், புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கினாலும், முதலீடுகள் செய்தாலும் அது பெருகிக் கொண்டே போகும் என்பது நம்பிக்கை. அட்சய திரிதியை நாள் முழுவதுமே மங்களகரமான நாள் என்பதால் அன்றைய தினம் எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்குவதற்கும் நல்ல நேரம் என்பது பார்க்க வேண்டிய அவசியமில்லை. இந்த நாளில் திருமணம் செய்பவர்களுக்கு மகாலட்சுமி மற்றும் திருமாலின் அருள் கிடைப்பதுடன், அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் குறைவில்லாமல் இருக்கும் என சொல்லப்படும். இந்த நாளில் புது வீடு குடியேறுதல் வீட்டில் மங்களம் பெருகும் என நம்பப்படுகிறது. மங்களம் மற்றும் செல்வ செழிப்பின் அடையாளமாக விளங்கும் தங்கத்தை வாங்கினால் அது பெருகிக் கொண்டே போகும். அதிக அளவில் தங்கம் சேரும் என்பது நம்பிக்கை.

அறிவியல் முக்கியத்துவம் :

சூரியன் சரியாக கிழக்கு திசையில் உதிக்கும் திசை சித்திரை மாதமாகும். இந்த மாதத்தில் வரும் வளர்பிறையின் மூன்றாவது நாளில் தான், உலக உயிர்களின் இயக்கங்களுக்கு காரணமான சூரியனும், சந்திரனும் தங்களின் முழு கதிர்களையும் பூமியின் மீது பாய்ச்சுகிறார்கள். இந்த நாளில் சூரியன் மற்றும் சந்திரன் முறையே 24 மற்றும் 36 டிகிரி கோணங்களில் இருக்கும். கிரகங்கள் தங்களின் சக்திகளை புதுப்பிக்கும் காலம் என்றே இந்த நாள் சொல்லப்படுகிறது. அப்போது பிரபஞ்சம் நேர்மறை ஆற்றல்களை வெளிவிடும் என்பதாலேயே இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த, மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.

ஆன்மிக காரணங்கள் :

புராணங்களின் அடிப்படையில் ஆன்மிக ரீதியாக பல வகைகளிலும் அட்சய திரிதியை முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

  1. குபேரன், மகாலட்சுமியை வழிபட்டு செல்வத்திற்கு பொறுப்பாளராக இருக்கும் பதவியை பெற்றார்.
  2. ஒரு பிடி அவல் கொடுத்த தனது நண்பர் குசேலருக்கு குறைவில்லாத செல்வத்தை பகவான் கிருஷ்ணர் வழங்கியது இந்த நாளில் தான்.
  3. உணவுக்கு தெய்வமான அன்னப்பூரணி அவதரித்தது இந்த நாளில் தான்.
  4. மகாவிஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமர் அவதாரம் செய்தது இந்த நாளில் தான்.
  5. மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசத்தின் போது உணவில்லாமல் கஷ்டப்பட்டனர். அப்போது அவர்களை சந்திக்க சென்ற கிருஷ்ணர் வரத்தை தந்து, அதன் மூலம் அட்சய பாத்திரத்தை திரெளபதி சூரியனிடம் இருந்து பெற்றது இந்த நாளில் தான்.
  6. மதுரையின் அரசியான அன்னை மீனாட்சி, சிவ பெருமானின் வடிவமான சுந்தரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டது இந்த நாளில் தான்.
  7. கங்கா தேவி, பூமிக்கு வந்ததும் அட்சய திரிதியை நாளில் என்பதால் இந்த நாளில் புனித நீராடுவது சிறப்புடையதாக கருதப்படுகிறது.

ஜோதிட சிறப்புகள் :

தந்தை உறவிற்கு காரணமான சூரியன் மற்றும் தாய் உறவிற்கு காரணமான சந்திரனின் ஆற்றல்கள் அதிகரித்து காணப்படும் நாள் என்பதால் தான் அட்சய திரிதியை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது பல தலைமுறை பாவங்களை போக்கி, புண்ணிய பலன்களை பெருகும் என நம்பப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, மங்களகாரகன் என சொல்லப்படுபவர் குரு. அவருக்குரிய உலோகம் தங்கம் என்பதாலேயே அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்குகிறார்கள். இதனால் குரு அருளும், மங்களங்களும் வாழ்வில் பெருகும் என்பது நம்பிக்கை. அதே போல் மகாலட்சுமியின் அருளை பெற்றவர் சுக்கிரன். இவரின் அருள் இருந்தால் சுக போகமான வாழ்க்கை அமையும். அதனால் சுக்கிரனின் அருளை பெறுவதற்காக , தங்கம் வாங்க முடியாதவர்கள் அவருடைய நிறமான வெள்ளை நிறத்தில் இருக்கக் கூடிய அரிசி, உப்பு, பால், மல்லிகைப்பூ போன்ற மங்கள பொருட்களை வீட்டில் வாங்கி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts