வாஷிங்டன்: சிங்கப்பூர் பிரதமர் லீ, நேற்று (மார்ச் 29) அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசியது வரலாற்று சிறப்புமிக்க தருணமாக அமைந்தது.
7 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நமது சிங்கப்பூர் பிரதமர் லீ, நேற்று அமெரிக்க அதிபரை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு West Wing Portico-வுக்கு வந்தடைந்த நமது பிரதமரை, அமெரிக்க Protocol தலைவர் ரூஃபஸ் கிஃபோர்ட் வரவேற்றார். பின்னர் பிரதமர் லீ, அதிபர் பைடனுடன் கலந்துரையாடுவதற்காக Oval அலுவலகத்திற்குச் சென்றார்.
அங்கு பிரதமரின் வருகைக்காக காத்திருந்த ஜோ பைடன், பிரதமர் லீயைக் கண்டதும், “வெல்கம் Prime Minister” என்று வாஞ்சையோடு எழுந்து வந்து அழைத்து வரவேற்றார். பின்னர் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ஜோ பைடன், “உக்ரைன் மக்களை ஆதரிப்பதில் சிங்கப்பூரின் கொள்கை ரீதியான பிரதமர் லீ-யின் தலைமைக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
கடந்த மாதம் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பால் ரஷ்யா மீது சிங்கப்பூர் பொருளாதாரத் தடைகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், அமெரிக்க மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) இடையேயான உறவு, மியான்மரில் ஜனநாயகம் திரும்புவதை ஊக்குவித்தல் மற்றும் இரு நாடுகளையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பது ஆகியவை குறித்தும் நாங்கள் இருவரும் விவாதித்தோம் என்று அதிபர் பைடன் கூறினார்.
பைடனுக்குப் பிறகு பேசிய நமது பிரதமர் லீ, “சிங்கப்பூர் அமெரிக்காவின் “மிகச் சிறந்த நண்பன்” என்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் ராணுவம் ஆகிய துறைகளிலும் சிறப்பாக உள்ளது என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, பிரதமர் லீயுடன் வெள்ளை மாளிகையில் நமது வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் ஜோசபின் தியோ ஆகியோர் உடன் இருந்தனர்.
அதிபர் பைடனுடனான சந்திப்பிற்குப் பிறகு, பிரதமர் லீ வெள்ளை மாளிகையில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்திக்க உள்ளார்.