TamilSaaga

400க்கும் மேற்பட்ட “தமிழர்களை” உடனே நாட்டை விட்டு வெளியேற்றிய சிங்கப்பூர் அரசு – காரணம் என்ன?

சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை தான் பெரும்பாலான தமிழர்கள் வேலைப்பார்க்க முன்னுரிமை கொடுக்கும் நாடுகளாகும். குறிப்பாக சிங்கப்பூர். இங்கு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர்.

அப்படி சிங்கப்பூரில் வேலை செய்து, தன் வாழ்க்கையையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்தியவர்கள் எண்ணற்றோர் உள்ளனர். இன்னமும் இருக்கின்றனர். இனிமேலும் இருப்பார்கள்.

அதேசமயம், இங்கு அரசு அனைத்து விஷயங்களிலும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும். இங்கு எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்தாலும், அவர்கள் அனைவருமே கண்காணிப்பில் தான் இருப்பார்கள். ‘நாம் செய்வது மற்றவர்களுக்கு எப்படித் தெரியப் போகிறது’ என்று நினைத்தால், அதைவிட ஒரு முட்டாளத்தனம் இருக்க முடியாது. ஏனெனில், இங்கு இருக்கும் அனைவரும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். தேச நலனிலும், பாதுகாப்பிலும் அவ்வளவு அக்கறை கொண்ட தேசம் சிங்கப்பூர்.

மேலும் படிக்க: “சிங்கப்பூரில் Construction துறையில் வேலை” – Electrical மற்றும் பல துறைகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, சிங்கப்பூரில் பணியாற்றி வந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் (25) என்பவரை வெளியேற்றியது சிங்கப்பூர் அரசு.

அதுமட்டுமின்றி, குமார் சிங்கப்பூருக்குள் நுழைய வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. தான் பணிபுரிந்த அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் குமார் மோதல் போக்கில் நடந்து கொண்டதால் தான் பணியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிங்கப்பூர் அரசின் இந்த நடவடிக்கை குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். சற்று காட்டமாகவே பேசியிருக்கிறார். அதில், “அந்த தம்பி குமார் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக திருப்பி அனுப்பப்பட்டிருப்பது வேதனைக்குரியது. இது அவசியமற்றது என்றும் கூறுவேன்.

இதற்கு முன்பாக 400க்கும் மேற்பட்ட நாம் தமிழர் பொறுப்பாளர்களை சிங்கப்பூர் அரசு அங்கிருந்து திருப்பி அனுப்பியிருக்கிறது. இதுகுறித்து, பலமுறை தூதரகத்தில் முறையிட்டு பார்த்துவிட்டோம். ஆனால், எந்த தீர்வும் கிடைக்கவில்லை. சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வை நாம் தமிழர் கட்சி கொண்டாடியிருக்கிறது.

மேலும் படிக்க: “சிங்கப்பூரில் 20 ஆண்டுகளாக வீட்டு வேலை” : ஓய்வின்றி உழைத்த தொழிலாளி ரூபி – மெய்யானது அவருடைய கனவு

அப்படியிருந்தும், விடுதலைப் புலிகள் பிரபாகரனை காரணம் காட்டி, சிங்கப்பூர் அரசு தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சிங்கப்பூரில் ஒருகாலத்தில் எங்கள் கட்சி மிக மிக வலிமையாக இருந்தது. ஆனால், இப்போது முழுமையாய் முடக்கப்பட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts