சிங்கப்பூரை தளமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான Shopee, கடந்த நவம்பர் 2021ல் அண்டை நாடான இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே, இந்தியாவில் அதன் அனைத்து செயல்பாடுகளையும் தற்போது நிறுத்த முடிவு செய்துள்ளது Shopee. ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில், Shopee நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “உலகளாவிய சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு” இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை மூட முடிவு செய்ததாகக் கூறினார். நேற்று திங்களன்று அனைத்து நிறுவன அளவில் நடந்த கூட்டத்தில் Shopee பணிநிறுத்தம் குறித்து ஊழியர்களுக்கு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
“இந்தியாவில் Shopeeயின் ஆரம்பகட்ட முயற்சிகளை மூட முடிவு செய்துள்ளோம், இதற்கு மாற்றாக எங்கள் உள்ளூர் விற்பனையாளர், நுகர்வோர் மற்றும் எங்கள் உள்ளூர் குழுவை ஆதரிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்” என்றும் Shopee கூறியுள்ளது. Shopee இ-காமர்ஸ் நிறுவனம் பெரும்பாலும் மொபைல் போன் குறித்த சாதனங்களை விற்பனை செய்து வந்தது. இந்நிலையில் நேற்று அந்நிறுவனம் அளித்த தகவலின்படி இன்று மார்ச் 29 12 மணி முதல் தங்கள் இணையம் மூலம் இந்தியாவில் யாரும் பொருட்களை வாங்க முடியாது. அதே நேரத்தில் Shopeeயில் தங்கள் பணத்தை Withdrawal செய்ய காத்திருப்பவர்கள் வரும் மே 30ம் தேதிக்குள் அதை செய்து முடிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
அதிக தள்ளுபடியுடன் குறைந்த விலை பொருட்களில் கவனம் செலுத்தும் Shopee, நவம்பர் 2021ல் இந்தியாவில் தொடங்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியா மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் Shopee பெரிய சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015ம் ஆண்டு இது சிங்கப்பூரில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இம்மாத துவக்கத்தில் France நாட்டில் தனது சேவைகளை நிறுத்திய நிலையில் தற்போது இந்தியாவிலும் சேவைகளை நிறுத்தியுள்ளது.
இந்தியாவில் ஒரு பெரிய பயனர் தளத்தைக் கொண்டிருந்த Online Gaming (Free Fire) நிறுவனமான Seaயின் ஒரு அங்கம் தான் Shopee என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ல் தொடங்கப்பட்ட சீன Appகள் மற்றும் தொழில்நுட்ப தயாரிப்புகள் மீதான இந்திய அரசாங்கத்தின் ஒடுக்குமுறையைத் தொடர்ந்து Sea-யின் மொபைல் கேம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. இந்தியாவில் Free Fire தடைக்குப் பிறகு, NYSE-பட்டியலிடப்பட்ட Sea Ltdன் சந்தை மதிப்பு பிப்ரவரி 11 அன்று ஒரே நாளில் $16 பில்லியன் குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் Shopee நிறுவனம் தனது செயல்பாடுகளை இந்தியாவில் நிறுத்தும் நிலையில் இந்தியாவில் Shopee நிறுவனத்திற்காக வேலை செய்தவர்களின் நிலை என்னவாகும் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதா? அல்லது அவர்கள் வேறு கிளைகளுக்கு மாற்றி அனுப்பப்படுவார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் Shopeeயின் அலுவலங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பணியாற்றி வந்தவர்களின் நிலை என்னவென்றும் தெரியவில்லை.