TamilSaaga

தாய் இறந்தது தெரியாமல்… கட்டி அணைத்து உறங்கிய 3 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – கண்கலங்க வைத்த காட்சி!

என்னவென்று சொல்வது…! கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில், இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பகல்பூர் ரயில் நிலைய பிளாட்ஃபார்மில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்த சென்று பார்த்த போது, அங்கே தரையில் இறந்து கிடந்த பெண்ணை கட்டி அணைத்தபடி 3 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான். இதையடுத்து அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, அந்த 3 வயது சிறுவன் குழந்தைகள் உதவி மையத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, அப்பெண்ணின் இறப்பு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி அரவிந்த் குமார் கூறுகையில், “அப்பெண்ணின் சடலம் சுமார் 72 மணி நேரம் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி வரை யாருமே அவரை அடையாளம் காண வரவில்லை. இதனால், அப்பெண் யார் என்பதையும் எங்களால் கண்டறிய முடியவில்லை. எனவே, நாங்களே மேற்கொண்டு இறுதி சடங்குகளை செய்துவிட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த 3 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் அப்பெண்ணின் மகன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய் இறந்தது கூட தெரியாமல், அந்த குழந்தை தாயை கட்டியணைத்து தூங்கிய காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts