TamilSaaga

சிங்கப்பூரில் விடுமுறை கிடைக்காமல் தவிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் – பெற்ற மகனையே இன்னும் தொட்டுத் தூக்க முடியாத அவலம்!

தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுத்துடலாம்… ஆனால், தவிக்கும் மனசுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்? அப்படி சிங்கப்பூரில் தவிக்கும் சில மனங்களை பற்றிய கட்டுரை இது.

கடந்த இரண்டு ஆண்டு காலம் பெருந்தொற்று உலகத்தையே சர்வ நாசம் செய்தது. ஆனால், இந்த சர்வ நாசத்தில் இரண்டு வகையாக நாம் பிரிக்கலாம்.

| ஒன்று… குடும்பத்தோடு ஒன்றாக இருந்து, அவர்கள் அருகில் இருந்து.. இந்த பெருந்தொற்று காரணமாக அவதிப்பட்டது..

இரண்டாவது… குடும்பத்தை விட்டு எங்கேயோ பிரிந்து இருந்து, தக்க நேரத்தில் உதவியாக அவர்களுடன் இருக்கவும் முடியாமல், பார்க்கவும் முடியாமல், பணத்தை மட்டும் அனுப்பிவிட்டு அவதிப்பட்டது |

இதில், நம் சிங்கப்பூரில் வசிக்கும் பல வெளிநாட்டு ஊழியர்கள் இந்த இரண்டாவது “சர்வ நாசத்தில்” தான் வருகிறார்கள். இப்போது விமான போக்குவரத்து எல்லாம் சகஜமாகிவிட்ட நிலையிலும் கூட, பல ஊழியர்கள் இன்னமும் விடுமுறை கிடைக்காமல், சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தை பார்க்க முடியாமல் உள்ளனர்.

உயர் பதவிகளில் இருப்பவர்களும் சரி.. சாதாரண ஊழியராக இருப்பவர்களும் சரி.. இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் விடுமுறை கிடைக்காமல் ஊருக்குச் செல்ல முடியவில்லை. ஏன் நிறுவனங்கள் அவர்களை இழுத்துப் பிடித்து வைத்துள்ளதா? என்றால் நிச்சயம் இல்லை.

ஆனால், சில நிறுவனங்களுக்கு வேறொரு நெருக்கடி இருக்கிறது. அதாவது, பெருந்தொற்று காரணமாக முடங்கியிருந்த பல பணிகள் இப்போது மிக துரிதமாக நடைபெற்று வருகின்றன. குறித்த நேரத்தில் வேலையை முடித்து கொடுக்க வேண்டிய கட்டாயம் பல நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனங்களுக்கு. கட்டுமான பணியில் உள்ள ஊழியர்கள் தான், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊருக்கு செல்ல முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் அதிகமாக உள்ளனர்.

இதற்கு ஒரு சரியான உதாரணம் ஒன்றையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். சமீபத்தில் நமது தமிழ் சாகா சிங்கப்பூர் தளத்தை தொடர்பு கொண்ட ஊழியர் ஒருவர் தான் படும் வேதனை குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அதில் அவர், “என் பெயர் பொண்ணுவேலு சிவசத்தியான். எனக்கு சொந்த ஊர் பாண்டிச்சேரி அருகே உள்ள வீராம்பட்டினம், ஒரு மீனவ கிராமம். 2019ம் ஆண்டு சிங்கப்பூரில் வேலைக்கு வந்தேன். ஆனால் மனைவிக்கு டெலிவரி நேரத்துல என்னால அங்க திரும்ப போகமுடியாத சூழ்நிலை. Lock Down போட்டாங்க. எனக்கு பையன் பிறந்து அவனுக்கு இப்போ ஒரு வயசும் ஆச்சு. ஆனால் அவனை இன்னும் நான் அவனை தொட்டுகூட பார்த்தது இல்லை. ஒவ்வொரு நாளும் எனக்கு அந்த குற்ற உணர்ச்சி குத்திக்கிட்டே இருக்கு. வேலை நேரத்தில் அலைபேசி பயன்படுத்த முடியாது, வீட்டிற்கும் இரவு நேரத்தில் 30 நிமிடங்கள் பேசுவேன் அவ்வளவு தான்.

ஊருக்கு போய் வருகின்ற செப்டம்பர் மாதத்தோடு மூன்று ஆண்டு நிறைவடைய போகிறது. இன்னமும் கஷ்டங்களை அனுபவிக்கிறேன். எப்போது அவனை பார்க்கப்போகிறேன் என்று தெரியவில்லை” என்று உருக்கமுடன் பேசினார்.

சிங்கப்பூர் முழுக்க இப்படி ஆயிரக்கணக்கான பொண்ணுவேலு சிவசத்தியன் இருக்கிறார்கள் என்பதே உண்மை. அதேசமயம், கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக விமான பயணங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பல ஊழியர்கள் சொந்த ஊருக்கு சென்றிருக்கின்றனர்.

இதில் கொடுமை என்னவெனில், இப்படி ஊருக்கு சென்ற சில ஊழியர்கள், சில நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள். அவர்கள் இப்போது பணியில் இல்லாததால், அதிக அனுபவம் இல்லாத ஊழியர்களை வைத்து வேலை வாங்கி வருவதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த பணியிட விபத்துகள் குறித்து ஆராய்ந்த போது, அனுபவமின்மை கொண்ட ஊழியர்களால் பணிகள் மேற்பார்வை செய்யப்படுவதும் விபத்துக்கு ஒரு காரணம் என்று நிறுவனங்கள் சார்பில் கூறப்பட்டது தான் விந்தை.

அதற்காக, ஊழியர்கள் ஊருக்கே போகாமல்… குடும்பத்தையே பார்க்காமல் எவ்வளவு நாள் தான் தாக்குப்பிடிக்க முடியும்?

Related posts