ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்கி வேலை செய்வார்கள் என்பதற்கு இந்த உண்மை சம்பவம் ஒரு உதாரணம்.
“தமிழ் சாகா சிங்கப்பூர்” தளத்தை அண்மையில் திரு.சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், சிங்கப்பூரில் வேலை பெற்றுத் தருவதாக தன்னை ஏமாற்றி ஒரு ஏஜென்சி பணம் பறித்தது குறித்து தகுந்த ஆதாரங்களுடன் நமக்கு அனைத்து விவரங்களையும் கொடுத்தார்.
என்னைப்போல் வேறொருவர் ஏமாறக் கூடாது என்பதே அவர் நம்மை தொடர்பு கொண்டதன் பிரதான காரணமாக இருந்தது.
இனி எல்லாம் அவரது வார்த்தைகளாக..
“வணக்கம் சார்.. நான் சிவில் முடிச்சிருக்கேன். இந்த துறையில் எனக்கு 13 வருடம் அனுபவம் இருக்கு. இதுல 6 வருஷம் வெளிநாட்டுல தான் வேலை பார்த்தேன். அரபு நாடுகள்ல வேலை பார்த்திருக்கேன். இப்போ சொந்த ஊருல தான் இருக்கேன். கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு.
சொந்தமான வீடு கட்டினோம். ஆனால், அதையும் இப்போ கடன் அதிகமானதால் விக்குற நிலைமைக்கு வந்துட்டோம். அதனால் தான் சிங்கப்பூர் போய் ஏதாவது சம்பாதிக்கலாம்னு முடிவு பண்ணேன். ரெண்டு, மூணு மாதத்துக்கு முன்னாடி, கொல்கத்தாவைச் சேர்ந்த Nexus Overseas-ங்குற ஏஜென்சியில இருந்து ஃபோன் பண்ணாங்க.
சிங்கப்பூருல வேலை வாங்கி தர்றதா சொல்லி கொல்கத்தா வர சொன்னாங்க. நானும் போனேன். முதல்ல 16 ஆயிரம் பணம் கட்ட சொன்னாங்க. இறுதியா, MTP ENGINEERS PTE LTD அப்டிங்குற சிங்கப்பூர் கம்பெனியில வேலை வாங்கி தர்றதா சொன்னாங்க. சொன்ன மாதிரி எனக்கு அந்த நிறுவனத்தோட பெயரில் Offer Letter அனுப்புனாங்க.
பிறகு, நான் எனக்கு தெரிஞ்சவங்க மூலமா, சிங்கப்பூரில் அந்த கம்பெனி பற்றி விசாரிக்க சொன்னேன். எல்லாரும், அந்த கம்பெனி சிங்கப்பூரில் இருக்கு-னு சொன்னதால, மேற்கொண்டு 16 ஆயிரம் பணத்தை அந்த ஏஜென்சிக்கு அனுப்பினேன். ஆனால், அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அந்த ஆர்டர் போலியானது-னு. மொத்தம் 32 ஆயிரம் கட்டி ஏமாந்துட்டேன். அந்த ஏஜென்சியும் ஃபோன் எடுக்க மாட்டேங்குறாங்க. என்கிட்ட பேசின அந்த ஏஜென்சி ஆளும் ஃபோனை எடுக்க மாட்டேங்குறாரு. இத்தனைக்கும், எனக்கு தெரிஞ்சவங்க மூலமா சிங்கப்பூரில் அந்த கம்பெனி பற்றி விசாரித்து, அது உண்மை என்று தெரிந்த பிறகு தான் இரண்டாவது முறை பணம் காட்டினேன். ஆனால், இறுதியில் நான் ஏமாந்துட்டேன்.
சிங்கப்பூரில் வேலை என்று யார் சொன்னாலும், ஒரு தடவைக்கு 100 தடவை விசாரிங்க. சிங்கப்பூரில் உள்ள எந்த கம்பெனி பெயரில் உங்களுக்கு Offer Letter கொடுக்குறாங்களோ, அந்த கம்பெனிக்கு நேரடியாக சிங்கையில் உள்ள உங்கள் உறவினர்களையோ, நண்பர்களையோ நேரடியாக போகச் சொல்லி, உங்களுக்கு கொடுக்கப்பட்ட Offer Letter உண்மையானது தானா என்பதை விசாரிங்க.
ச்சும்மா இன்டர்நெட்ல அப்படியொரு கம்பெனி இருக்கானு தேடாம, அங்க நேரடியாகவே போய் offer letter காண்பிச்சு, இது உண்மையான ஆர்டரா?-னு விசாரிக்க சொல்லுங்க. அதுக்கப்புறம் முழு பணத்தையும் கட்டுங்க” என்று சரவணன் முடித்துக் கொண்டார்.