Motivational Story: நமது அண்டை நாடான இந்தியாவை பொறுத்தவரை கிராமிய பாடலுக்கும் கிராமிய மணம் சார்ந்த கலைஞர்களுக்கும் என்றுமே மவுசு அதிகம் உண்டு. காரணம் அவர்களுடைய கலை அவர்களின் வாழ்வோடு கலந்த ஒன்று. அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி மூலம் அதில் வரும் நிகழ்ச்சிகள் மூலமும் பிரபலமான நடிகர் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் பலர் உள்ளனர். அதிலும் குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள பாடகர் படகிகளின் பட்டியல் மிகவும் பெரிது என்றே கூறலாம்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஒரு ஜோடி தான் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. தற்போது இந்த ஜோடிக்கு உலக அரங்கில் நிச்சயம் அறிமுகம் தேவையில்லை. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 6வது சீசன் வந்தபோது கணவன் மனைவி என்று இருவரும் அதில் கலந்துகொண்டு அசத்தினார்கள். பல கிராமத்து கலைஞர்கள், கிராமத்து இசை என்று அவர்கள் பங்கேற்ற அனைத்து நாட்களுக்கும் பல அருமையான நிகழ்வுகள் அந்த மேடையில் அரங்கேறியது. செந்தில் கணேஷ் தனது விடாமுயற்சியால் இறுதிப் போட்டியில் வென்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இந்த ஜோடிக்கு கிடைத்த அடுத்த வெற்றி தான் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் படத்தில் வந்த “என்ன மச்சான், சொல்லு புள்ள” என்ற பாடல். பெரியவர் முதல் சிறியவர் வரை பட்டிதொட்டி எங்கும் இந்த பாடல் பிரபலம். இந்த பாடலின் வெற்றிக்கு பிறகு இவர்களுக்கு ஏகப்பட்ட கச்சேரிகள் குவிந்தன. குறிப்பாக நமது சிங்கப்பூருக்கு அடிக்கடி பல கச்சேரிகளுக்கு அவர்கள் வருவது உண்டு. பல வெளிநாடுகளில் பல மேடைகளில் பாடும் வாய்ப்பு இந்த ஜோடிக்கு கிடைத்தது. இந்நிலையில் தான் அவர்களுடைய சொந்த ஊரில் அடுக்குமாடி வீடு ஒன்றை கட்டியுள்ளனர்.
உண்மையியல் திறமையுள்ள கலைஞர்களுக்கு இவர்கள் ஒரு எடுத்துக்காட்டாகவே வாழ்ந்து வருகின்றனர் என்றே கூறலாம். திறமையும், பொறுமையும் இருந்தால் மட்டும் போதும் வெற்றி மகுடம் உங்களை தேடிவரும் என்பதற்கு இவர்கள் ஒரு எடுத்துக்காட்டு.