தமிழ் சினிமாவில் 45 வருடங்களாக நம்பர் ஒன் இடத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதுவரை ரஜினியை வென்றதாக நம்பக்கூடியவகையிலான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதில்லை என்பதே சரித்திரம் சொல்லும் உண்மை.
ஆனாலும் அடுத்த இடத்தில் ரஜினிக்கு கடும் சவாலாக இருந்தவர்கள் கமல்ஹாசன் மற்றும் விஜயகாந்த். அதன்பிறகு கடந்த கால்நூற்றாண்டாக அவருடைய இடத்துக்கு போட்டி என்கிற விவாதமே இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கும் ரஜினியின் வயது 72-ஐ கடந்துவிட்டதாலும் உடல்ரீதியாக சில பிரச்சனைகளிலும் இருப்பதாக அவரே தெரிவித்ததாலும், அதிகபட்சம் தன்னுடைய சினிமா பொன்விழா ஆண்டான 2025 ஒய்வை அறிவிக்கவே வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1975 முதல் இந்திய சினிமாவில் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தாலூம் பாட்ஷா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், கபாலி, 2.0 வைவிட ஒரு வெற்றியை பதியவைத்துவிட்டு தனது ஒய்வை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் இப்போதே அடுத்த நம்பர் ஒன் யார் என்கிற மில்லியன் டாலர் கேள்விகள் திரையுலகில் எழுந்தாலும் சினிமாவில் மிகப்பெரிய அனுபவங்களைக் கொண்ட தயாரிப்பாளர்களிடம், குறிப்பாக எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினியை வைத்து கடந்த 40 வருடங்களில் படமெடுத்த பழம்பெரும் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மற்றும் அனுபவம் வாய்ந்த ரஜினியின் நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் இருவரிடமும் பல்வேறு கேள்விகளை அறிவியல் அனுபவ ரீதியாக மற்றும் யதார்த்தமாகவும் கேட்டதில் அவர்களின் தீர்க்கமான பதிலாக கிடைத்தது ரஜினிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் என்பது தான்.
ஆம்! திரையுலகில் ரஜினி, விக்ரம் இருவருக்கு பிறகு எந்தவித பின்ணணியும் திரைமறைவு ஆதரவும் இன்னும் சொல்வதென்றால் ஊடகங்கள் ஆதரவும் இல்லாமல் தமிழ் சினிமாவின் தூணாக தாங்கி நிற்கக்கூடியது சாட்சாத் சிவகார்த்திகேயனே. இதை மிகப்பெரிய தரவுகளுடன் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகே உணர முடியும். இதை தமிழகத்தில் சினிமாத் துறையில் அசுரபலம் பொருந்திய இடத்தில் இருக்கும் தமிழக முதல்வரின் மகனும் திமுகவின் இளைஞரணி செயலாளரும் ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவன உரிமையாளருமான உதயநிதி ஸ்டாலின் உறுதி செய்திருக்கின்றார்.
ஆம்! ரஜினியின் “அண்ணாத்த” படத்துக்கு பிறகு ஒட்டுமொத்த தமிழக உரிமையை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் டான் படத்துக்கே இவர் முக்கியத்துவம் கொடுத்திருப்பது மட்டுமல்லாது, முன்ணணி நடிகர்கள் என்று சோஷியல் மீடியாக்களில் பிரதிபலிக்கப்படும் நடிகர்களின் படத்தைவிட கூடுதல் விலைக்கு “டான்” படத்தை வாங்கியிருப்பதை அதிகாரப்பூர்வ தகவல்கள் உறுதி செய்கின்றன.
உதயநிதி தரப்பில் நாம் பேசியபோது, நிச்சயமாக ரஜினி படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்துக்கே அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது. ஒடுகிற குதிரையில் எது முன்ணணியோ அதைத்தானே நம்பி பந்தயம் கட்டமுடியும் என்று நேரடியாகவே வெளியீட்டு நிறுவன தலைமை நிர்வாகி சொன்னது சிவகார்த்திகேயனின் நம்பர் ஒன் இடத்தை உறுதி செய்துள்ளது.
45 வருடங்காளாக பல நடிகர்களின் ஏக்கப்பெருமூச்சை சிவகார்த்திகேயன் என்னும் சாமானிய குடும்பத்தை சார்ந்தவர் சரித்திரமாக்கி நிறுத்தியுள்ளார். 45 வருட சாம்ராஜ்யத்தின் ஒய்வுக்குப்பிறகு இளைய தலைமுறையின் ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. இது தமிழ்சினிமாவின் நெக்ஸ்ட் வெர்ஷனாகவே இருக்கும்.
எழுத்து மற்றும் நேர்காணல் – திராவிட ஜீவா