TamilSaaga

ஏமாற்றம்.. நம்பிக்கை துரோகம்.. கண்ணீர்! தடைகளை தகர்த்து இன்று 1 லட்சம் பேருக்கு விருந்து வைத்து.. ஜாம்ஜாமென “தமிழக மருமகள்” ஆன நயன்தாரா!

நடிகர்களின் ஆளுமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ஆனால், தான் அறிமுகமான நாளில் இருந்து தற்போதுவரை ஒரு நடிகை உச்ச இடத்திலேயே நிற்கிறார் என்றால் அது நயன்தாரா ஒருவர்தான். தன் கடின உழைப்பாலும் அழுத்தமான கதாபாத்திர தேர்வாலும் இந்த அசாத்தியத்தை சாத்தியமாக்கியிருக்கும் நயன்தாரா, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையும் மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தையும் பிடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். “இவர் அவ்ளோ தான்.. மார்க்கெட் காலி.. இனி கஷ்டம்” என்று சொன்னவர்களை, இன்று “எனக்கு பிடித்த ஹீரோயின் நயன்தாரா தான்” என்று சொல்ல வைத்த அழுத்தக்காரி இவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்தடுத்த காதல் தோல்விகளிலும் சிக்கி, காணாமல் போன நடிகைகள் பட்டியலில் இடம்பெறவிருந்த நயன்தாரா, அதிலிருந்து மீண்டு வந்து இன்று தமிழகத்தின் மருமகள் ஆகியிருக்கிறார். ஆம்! நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் இன்று இனிதே நடந்து முடிந்திருக்கிறது.

இன்று தென்னக சினிமாவின் நம்பர் 1 நாயகியாக இருக்கும் நயன்தாரா, ஆரம்பத்தில் சினிமாவுக்குள் நுழைந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவரது இயற்பெயர் டயானா மரியம் குரியன். இவருடைய தந்தை இந்திய விமான படையில் பணியாற்றி வந்ததால் தன்னுடைய பள்ளி பருவத்தை பெரும்பாலும் குஜராத், டில்லி என வட இந்தியாவில்தான் கழித்தார். பின்னர் தன் சொந்த ஊரான கேரளாவில் ஆங்கில இலக்கியம் பயின்றார். கல்லூரியில் படிக்கும்போது பார்ட் டைமாக மாடலிங் துறையில் கால் பதித்த நயன்தாரா, அதன்மூலம் சிறுசிறு விளம்பரங்களிலும் தலைக்காட்ட தொடங்கினார். ஆரம்பத்தில் நயன்தாரா நடித்த விளம்பர படங்கள் தற்போதும் இணையத்தில் பிரபலம்.

அவர் நடித்த விளம்பரங்களில் ஒன்றை பார்த்த மலையாள இயக்குநர் சத்யன், தான் இயக்கும் அடுத்த படத்தில் அவரையே ஹீரோயினாக்க முடிவு செய்தார். சினிமாவில் நடிப்போம் என கனவிலும் நினைத்து பார்க்காத நயன்தாரா, திடீரென வந்த வாய்ப்பை ஏற்பதா வேண்டாமா என குழப்பத்தில் இருந்தார். சரி, ஒரேயொரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு மீண்டும் படிக்க சென்றுவிடுவோம் என முடிவெடுத்து அவர் நடித்த படம் மனசினகாரே. இந்த படத்தின் வெற்றி அடுத்தடுத்து நயன்தாராவுக்கு பல வாய்ப்புகளை பெற்றுத்தந்தது. அடுத்த ஆண்டே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இதில் ஒரு படத்தில் பேயாகவும் நடித்தார். இந்த படத்தில் நடிக்கும்போது நயன்தாராவின் வயது 19. ஒரு 19 வயது பெண் நடிப்பில் மோகன்லாலுக்கே சவால் விடுகிறாரே என கேரள ஊடகங்கள் இவருடைய நடிப்பை பாராட்டித் தள்ளின.

மலையாளத்தில் ஒரு ஹீரோயின் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்தால் அவரை தமிழுக்கு அழைத்து வருவது தமிழ் இயக்குநர்களின் வழக்கம். அந்தவகையில் கமர்ஷியல் இயக்குநர் ஹரி, தான் இயக்கிய ஐயா படத்தின் மூலம் நயன்தாராவை தமிழுக்கு அழைத்து வந்தார். ஆனால் அதற்கு முன்பே நயன்தாரா இரண்டு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் வெளியேற்றப்பட்டார். பார்த்திபன் இயக்கி நடித்த குடைக்குள் மழை படத்தில் முதலில் நயன்தாராதான் ஹீரோயினாக ஒப்பந்தமானார். இந்த செய்தியை ஒரு நள்ளிரவில் நயன்தாராவுக்கு ஃபோன் செய்து சொன்ன பார்த்திபன், அடுத்த நாள் காலையிலேயே படப்பிடிப்புக்காக சென்னை வரவேண்டும் என்றார். ஆனால் அன்றிரவு கேரளாவில் இருந்து சென்னைக்கு உடனே கிளம்ப முடியாததால், ஒருநாள் கழித்து வரவா என நயன்தாரா கேட்க, ஒரு நடிகைக்கு பன்ச்சுவாலிட்டிதான் முக்கியம் என கூறி அவரை அந்த படத்திலிருந்தே நீக்கினார் பார்த்திபன்.

தமிழில் தன் முதல் பட வாய்ப்பே இப்படியானதில் நயன்தாராவுக்கு வருத்தம். ஆனால் அதை விடவும் வருத்தம் பார்த்திபனுக்குதான். இப்படிப்பட்ட ஒரு நடிகையை தூக்கி எறிந்துவிட்டோமே என தற்போதுவரை அவர் வருத்தப்படுகிறார். அதேபோல சிம்புவின் ’தொட்டி ஜெயா’ படத்திலும் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் நயன்தாராதான். இதற்காக சென்னை வந்து ஃபோட்டோ ஷூட்டிலும் பங்கேற்றார். ஆனால் ஒரு முன்னணி நடிகைதான் தன் படத்தில் நடிக்க வேண்டும் என இயக்குநர் துரை விரும்ப, அப்படத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். இப்படியாக தன்னுடைய தமிழ் வாய்ப்பு தள்ளிபோய்க்கொண்டே இருப்பதில் வருத்தப்பட்ட நயன்தாரா, ஐயா படத்தில் சரத்குமாருடன் நடிக்க வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

கதைப்படி இதில் நயன்தாராவுக்கு கிராமத்து பெண் வேடம். தமிழர்களுக்கு பிடித்தமான உடற்கட்டும் வட்ட வடிவிலான முகவெட்டும் இருந்தது, அவருக்கு கூடுதல் பிளஸ்ஸாக அமைந்தது. படம் முழுக்க பாவாடை தாவணியில் வலம் வந்த நயன்தாராவை தங்கள் வீட்டு பெண்ணாகவே தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். குறிப்பாக ஐயா படத்தில் இடம்பெற்ற ’ஒரு வார்த்தை பேச ஒருவருஷம் பாடல்’ அவரைதமிழகத்தின் பட்டி தொட்டி வரைக்கும் கொண்டுபோய் சேர்த்தது.

மேலும் படிக்க – ஊரே வியந்த திருமணம்… கணவரின் ‘எல்லை’ மீறிய உறவு – “இசைஞானி” இளையராஜா குடும்பத்தில் சோகம்

ஐயா படம் வெளியாவதற்குமுன்பாகவே நயன்தாரா நடித்தமூன்று மலையாள படங்களையும் பார்த்து அவருக்கு ரசிகராக மாறிப்போன இயக்குனர் பி வாசு, அடுத்ததாக தான் இயக்கும் சந்திரமுகி படத்தில ’சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார். சந்திரமுகியில் நயந்தாராவின் நடிப்பு அவரை மிகப்பெரும் உயரத்துக்கு அழைத்துச் சென்றது.

அறிமுகமான படத்தில் இருந்தே மோகன் லால், சரத்குமார், ரஜினி என சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்ததால் சீனியர் ஹீரோக்களுடன் மட்டும்தான் ஜோடி சேருவார் என நயன்தாராவை சுற்றி ஒரு பிம்பம் உருவாக தொடங்கியது. இதை உடனடியாக உடைக்க நினைத்த நயன்தாரா, இதற்காக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில இரண்டாவது நாயகியாக நடிக்க வந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொண்டார்.

அதுவரை குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் ஹோம்லி பெண்ணாக வலம்வந்த நயன்தாரா, தன்னை சுற்றி எந்த இமேஜும் இருக்கக் கூடாது என்பதற்காக கஜினியில் கிளாமர் தோற்றத்திலையும் ஒரு பாட்டுக்கு ஆடி இருந்தார். அதேபோல் விஜய் கேட்டதற்காக சிவகாசி படத்திலும் ஒரு குத்து பாட்டுக்கு நடனமாடினார். ரஜினிக்கு ஜோடியாக நடித்த அடுத்த வருடமே, ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாட நயன்தாரா ஒப்புக்கொண்டது ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியத்துடன் பார்க்க வைத்தது.

தான் அறிமுகமான மூன்றே ஆண்டுகளில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளர்ந்திருந்த நயன்தாரா, 2006-ம் ஆண்டு ’லக்‌ஷ்மி’ எனும் தெலுங்கு படத்திலும் அறிமுகமாகி இருந்தார். இதன் வெற்றி, தெலுங்கிலும் நயன்தாராவுக்கான மார்கெட்டை ஏற்படுத்திக்கொடுத்தது. தெலுங்கில் நடிக்க தொடங்கி இருந்தாலும் நயன்தாராவின் கவனம் முழுவதும் தமிழில்தான் இருந்தது. அந்தவகையில் 2006-ம் ஆண்டு தீபாவளியில் மட்டும் அவர் நடிப்பில வல்லவன், தலைமகன், ‘ஈ’ ஆகிய மூன்று படங்கள் வெளியாகின.

இதில் வல்லவன் படத்தில் நடிக்கும்போது சிம்பு மீது காதல் வயப்பட்ட நயன்தாரா, அந்த படம் வெளியாகும்போது தங்கள் காதல் முறிந்து விட்டதாக அறிவித்தார். ஒரு பக்கம் காதல் தோல்வியால் நயன்தாராவின் பெர்சனல் வாழ்க்கை கேள்விக்குறியாக, இன்னொரு பக்கம் அவர் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்களும் தோல்வியடைந்து அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை காதல் தோல்வி விவகாரத்தில் சிக்கிவிட்டால் அவர் கேரியரே காலியாகிவிடும். ஆனால் நயன்தாரா விஷயத்தில் காதல் தோல்விக்கு பிறகுதான் அவருடைய கேரியர் உச்சத்தை தொட ஆரம்பித்தது. சிம்புவுடனான காதல் தோல்விக்கு பிறகு மிகுந்த மன உளைச்சலில் இருந்த நயன்தாரா, கொஞ்ச நாள் படங்களில் நடிப்பதையே நிறுத்தியிருந்தார். பின்னர் ரஜினி கேட்டதற்காக சிவாஜி படத்தில் ஒரேயொரு பாட்டுக்கு நடனமாடி இருந்தார். இனி கேரியரில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என நினைத்த அவர், எல்லாரும் கேலி பேசிய தன் உடல் எடையையும் அதிரடியாக குறைத்து ஆச்சரியமான ஒரு தோற்றத்துக்கு மாறினார்.

அதே ஆண்டு அஜித் நடித்த பில்லா படத்தில் முதன்முறையாக அவருக்கு ஜோடியாக நடித்தார். முழுக்க முழுக்க ஹாலிவுட் பாணியில் ஸ்டைலிஷாக உருவான பில்லா படத்தில் பிகினி உடையில் நடிக்கவும் தைரியமாக ஓகே சொன்னார் நயன்தாரா. கொஞ்ச காலமாய் தமிழ் ரசிகர்கள் நயன்தாராவை மறந்திருந்த நிலையில், இந்த பிகினி காட்சி தொடர்பாக வெளிவந்த செய்திகள், பரபரப்பாக பேசப்பட்டு மறுபடியும் அவரை லைம்லைட்டுக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

கிட்டத்தட்ட அவருடைய கேரியரே காலி என எல்லாரும் பேசத் தொடங்கிய நேரத்தில் பில்லாவின் மூலம் அதிரடியாய் ரீ எண்ட்ரி கொடுத்த நயன்தாரா, அடுத்த ஆண்டு வெளியான ’யாரடி நீ மோகினி’ மூலம் நம்பர் 1 இடத்தை மறுபடியும் தன்வசப்படுத்திக் கொண்டார்.

ஒருபக்கம் பில்லாவில் மயக்க வைக்கும் கிளாமர் தோற்றம் இன்னொரு பக்கம் யாரடி நீ மோகினியில் அதற்கு நேர்மாறாக முழுக்க முழுக்க ஹோம்லி தோற்றம் என இரண்டிலும் அசத்திய நயன்தாரா மீண்டும் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். இதன் வெற்றியைத் தொடர்ந்து நயன்தாராவை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய முன்னணி ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும் போட்டிப் போட ஆரம்பித்தார்கள். ஆனால் அந்த சமயத்தில் சிவாஜி மூலம் தன்னை மறுபடியும் திரைக்கு கொண்டுவந்த ரஜினிக்காகவும் பில்லா மூலம் தனக்கு பிரேக் கொடுத்த அஜித்துக்காகவும் குசேலன், ஏகன் படங்களில் கதையே கேட்காமல் நடித்தார். 2009-ம் ஆண்டு விஜய்க்கு ஜோடியாக வில்லு, அஜித்துக்கு ஜோடியாக ஏகன், சூர்யாவுக்கு ஜோடியாக ஆதவன் என ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருக்கும் ஜோடியாக நடித்து பிரமிக்க வைத்தார்.

இதில் வில்லு படத்தில் நடிக்கும்போது இயக்குனர் பிரபுதேவா மேல் மறுபடியும் காதலில் விழுந்த நயன்தாரா, அந்த காதலை திருமணம் வரைகொண்டுபோக முயற்சி செய்தார். பிரபுதேவாவின் பெயரை தன் கையில் பச்சை குத்திய நயன்தாரா, அவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டே விலகவும் முடிவு செய்தார். அந்த வகையில் தெலுங்கில் தான் நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீ ராம ராஜ்யம் படம்தான் தனது கடைசி படம் என பகிரங்கமாக அறிவித்த அவர், அந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் அழுதப்படியே இயக்குனர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய வீடியோ அந்நாளில் வைரலாக பரவியது.

ஆனால் நயன்தாராவின் இந்த காதலும் முறிவுக்கு வந்தது. பிரபுதேவாவுக்காக சினிமாவை விட்டு விலகும் முடிவை எடுத்த நயன்தாரா, மறுபடியும் நடிக்க வருவாரா மாட்டாரா என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழத் தொடங்கியது. சினிமாவை பொறுத்தவரை ஆண் நடிகரோ பெண் நடிகரோ ஒரு சின்ன இடைவெளி விட்டாலும் ரசிகர்கள் அவர்களை உடனே மறந்துவிடுவார்கள். ஆனால் நயன்தாரா விஷயத்தில் நடந்தததோ வேறு. இரண்டு வருடம் கழித்து நடிக்க வந்தாலும் நயன்தாராவை ரசிகர்கள் வரவேற்ற விதம் பலருக்கும் பிரம்மிப்பை ஏற்படுத்தியது.

2011-ம் ஆண்டு ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தில்நடித்த நயன்தாரா, அதன்பிறகு இரண்டு வருடம் இடைவெளிவிட்டு நடித்த படம் ராஜா ராணி. ஆர்யா, ஜெய் என இரண்டு நாயகர்கள் இருந்தாலும் இரண்டு வருடம் கழித்து நடிக்க வந்த நயன்தாராவுக்காகவே ’ராஜா ராணி’ பாக்ஸ் ஆபீஸில் 50 கோடி வரைவசூல் செய்து மிரட்டியது.

மீண்டும் பழையபடி ஃபார்முக்கு வந்த நயன்தாரா, அஜித் பாணியில் இனி தன் படங்களை விளம்பரப்படுத்த மாட்டேன் என அதிரடியான ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார். இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் எந்தவொரு நடிகையும் எடுக்க துணியாத ஒரு முடிவை நயன்தாரா எடுத்தபோது ஒட்டுமொத்த Industry-யும் அவரை ஆச்சரியமுடன் பார்த்தது. ஆனால் நயன்தாரா எதிர்பார்த்தது போலவே முன்னெப்போதும் இல்லாத அளவு அதன்பிறகுதான் அவர் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய பெரிய வெற்றிகளை பதிவு செய்ய ஆரம்பித்தன.

2015-ம் ஆண்டு நயன்தாராவின் கேரியரில் மறக்க முடியாத ஆண்டு. ஒரு ஸ்டாராக இருந்த அவர், லேடி சூப்பர்ஸ்டாராக மாறிய வருடம் என்றுகூட சொல்லலாம். அந்த ஆண்டில்தான் முதன்முறையாக ஹீரோயின் சார்ந்த கதையில் அவர் நடித்த ’மாயா’ வெளியாகி இருந்தது. ஹீரோவை உருகி உருகி காதலிக்கும் ஹீரோயின், சுவிட்சர்லாந்து, லண்டன் என ஹீரோவோடு சேர்ந்து ஆடும் டூயட் பாடல்கள் என இது எதுவுமே இல்லாமல் முழுக்க முழுக்க நயன்தாராவின் நடிப்பை மட்டுமே நம்பி வெளியான மாயா, அந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக உருவெடுத்தது.

மாயாவை தொடர்ந்து அதே வருடம் வெளியான ’நானும் ரௌடிதான்’ திரைப்படம், நயன்தாராவின் நடிப்பில் இன்னொரு பரிணாமத்தை காட்டியது. படம் முழுக்க, காது கேட்காத, திக்கி திக்கி பேசும் பெண்ணாக வந்த நயன்தாராவை பார்த்து பிரமித்து போகாத ரசிகர்களே இல்லை என்று சொல்லும் அளவு இதில் நயன்தாராவின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது.

கோபி நயினார் சொன்ன அறம் படத்தின் கதையைக் கேட்ட நயன்தாரா, அதில் நடிக்க சம்மதித்தது மட்டுமின்றி அந்த படத்தை தயாரிக்கவும் செய்தார். கமர்ஷியல் அம்சங்களுக்காக துளியும் சமரசம் செய்யாமல் உருவாக்கப்பட்ட அறம் படத்தை எல்லோரிடமும் கொண்டுபோய் சேர்ப்பதற்காக தன்னுடைய கொள்கையையும் விட்டுக்கொடுத்து அந்த படத்தை விளம்பரம் செய்தார். அதன் ஒரு பகுதியாக சென்னையில் தியேட்டர் விசிட் அடித்தபோது அவரை காண ஏராளமான ரசிகர்கள் கூடினர். அவரை பார்த்த ரசிகர்கள் தலைவி என கோஷமிட்டதை கேரள ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டு, ஜெயலலிதாவுக்கு பின் தமிழகத்தின் புதிய தலைவி நயன்தாராதான் என எழுதினர்.

ஒவ்வொருமுறை தான் வீழும் போதும் முன்பைவிட பல மடங்கு வீரியத்தோட எழுந்து வந்து தன் மீது வைக்கப்படும் விமரசனங்களுக்கு, தன் படங்களின் வெற்றி மூலமாக பதில் சொல்வது நயன்தாராவின் ஸ்டைல். நன்றாக நடிக்கக்கூடிய எல்லா நடிகர்களும் ரசிகனின் மனதில் இடம் பிடிப்பதில்லை. அதுபோல நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முதன்மையான காரணம் அவருடைய போராட்ட குணமே. எல்லா நடிகைகளை போலவே நயன்தாராவையும் ஆரம்பத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள காரணம், அவருடைய வசீகர தோற்றமும் கவர்ச்சியும்தான். ஆனால் இன்று எந்தவொரு நடிகைக்கும் கொடுக்காத தனி இடத்தை கொடுத்து நயன்தாராவை மக்கள் கொண்டாட காரணம் பெர்சனல் வாழ்க்கையில் அவர் கண்ட போராட்டங்களே.

பரபரப்பாக மாறிவிட்ட இந்த உலகில் எல்லோரும் பேரையும் புகழையும் தேடி ஓடிக்கொண்டிருக்க.. அவை அனைத்தும் தன்னை தேடி வந்தாலும் நயன்தாரா தேடி செல்வது தூய்மையான அன்பை மட்டுமே. அதனால்தான் இரண்டு காதல் முறிவுக்கு பின்பும் அவரால் அதை கடந்து போக முடிகிறது.

நயன்தாரா இருக்கிறார் என்றால், இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே வியாபாரம் ஆகிறது. நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் தன் ஆளுமையை ஆழமாக நிருபித்துள்ளார் நயந்தாரா.
நயன்தாரா முகத்தில் ஒருவித புன்னகை எப்பொழுதும் படந்திருக்கும், அதைவிட முக்கியமாக அந்த கண்களில் ஒருவித வசீகரம் இருக்கும். தோற்று போன நடிகைகள் மத்தியில் பிடிவாதமாய் வென்று காட்டி நிற்கும் நயந்தாரா ஒரு அதிசயம், தன்னம்பிக்கைக்கும் போராட்டத்திற்கும் மீண்டு வரும் வழிகாட்டியாய் பெண்களுக்கு தோன்றும் அவர் பெரும் அதிசயம்.

தமிழ் திரையுலகம் கண்ட அதிசயம் அவர், நிச்சயம் இத்தனை சூறாவளி , தோல்வி, கண்ணீர், ஏமாற்றம், வஞ்சகம் அதை தாண்டி மாறிவிட்ட காலங்களிலும் நயன்தாராவால் 18 வருடமாக நம்பர் 1 இடத்தில் இருக்க முடிகின்றது என்றால் சாதாரணம் அல்ல.

2005ல் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சந்திரமுகியில் ஜோடி போட்டவர், லேடி சூப்பர் ஸ்டாராக 2022ல் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்” வரை ஹை ஸ்பீடில் பயணித்துக் கொண்டிருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் அத்தனை விருதுகளையும் வாங்கி இருந்தாலும் தமிழின் முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடன் ஜோடி சேர்ந்து விட்டாலும் ஒவ்வொரு முறை நயன்தாரா படம் வெளியாகும்போதும் நயன்தாராவுக்காக இந்த படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் சொல்வதுதான் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக அவர் படைத்த சாதனை.

இம்முறை காதலிலும் ஜெயித்துவிட்டார். இயக்குனர் விக்னேஷ் சிவன் உடனான அவரது காதல் இன்று (ஜூன்.9) நல்லபடியாக திருமணத்தில் முடிந்துள்ளது. கல்யாணத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இந்த கல்யாண விருந்தை வழங்க இந்த புதுமணத் தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

நயன்தாரா தனது வெற்றிப்பயணத்தை இன்று தான் முழுமை செய்துள்ளார் என்றால் அது மிகையாகாது!

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts